Friday, September 3, 2010

தி வே ஹோம்




                 
 மெளனமாய் சில பாடங்கள்
     யுகன்

இக்கதை ஒரு கோடைவிடுமுறை காலத்தில் நிகழ்கிறது.
ஷாங்க்-வூ ஏழு வயது பையன். அவனது அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். வைத்திருந்த கடையும் நஷ்டமாகி விட்டாதால் புதிய வேலை தேடும் பொருட்டு தன் மகனை மலையோரக் கிராமத்தில் வசிக்கும் தன் தாய் வீட்டில் விட்டு விட வருகிறாள்.
பாட்டிக்கு 75 வயது. அவளால் வாய்பேச முடியாது. காது மந்தம், கூன் விழுந்த முதுகு. நகரத்தில் பிறந்த வளார்ந்த ஷாங் வூவிற்கு கரண்ட் இல்லாத பைப்பில் தண்ணீர் வராத பாட்டியின் வீடு சுத்தமாகப்பிடிக்கவில்லை. அம்மா வலுக்கட்டாயமாக அங்கு இருக்கச் சொல்கிறாள் என்பதால் பாட்டியில் ஷூவின் மீது சிறுநீர் கழிக்கிறான்.
அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது பாட்டி அவனை கைபிடித்து கூப்பிட அவளுக்கு கை கொடுக்க மறுக்கிறான். அவன் நெஞ்சில் கையை வைத்து வட்டம்போட்டு ஜாடை காட்டுகிறாள். அது என்னவென்று புரியாத ஷாங்வூ அவளை பைத்தியக்காரி என்று திட்டுகிறான்.
பாட்டி கொடுத்த உணவுகளைச் சாப்பிடாது தான் கொண்டு வந்த டின் உணவுகளையேச் சாப்பிடுகிறான்.. பாட்டியிடம் நட்புடன் இருக்கும் பக்கத்துவீட்டுப் பையன் நட்பு கொள்ள வரும்போது அவனிடம் பேச மறுக்கிறான். அவனுக்கு இருக்கும் ஓரே பொழுது போக்கு வீடியோ கேம் விளையாடுவது தான். எந்த நேரமும் விளையாடிக்கொண்டிருக்கிறான். பாட்டி அவனிடம் கேட்கும் ஓரே உதவி ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்க வேண்டுமென்பதுதான். அதையும் வேண்டாவெறுப்பாக கோர்த்துக் கொடுப்பான்.

ஒரு நாள் வீடியோ கேமின் பேட்டரியும் தீர்ந்து விடுகிறது. பாட்டியிடம் பணம் கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லையென்கிறாள். துவைத்துக் கொண்டிருக்கும் பாட்டியை கோபத்தில் தள்ளிவிடுகிறான்.
பாட்டி பணம் தராததால் பாத்திரத்தை எட்டி உதைத்து உடைக்கிறான். பாட்டியின் ஷூவையும் ஒளித்து வைக்கிறான். அத்துடன் வீட்டின் சுவரின் பாட்டியை கேலி செய்து படங்களும் வரைந்து வைக்கிறான். பாட்டி இவையனைத்தையும் பார்த்துவிட்டு அவனை ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள்.

ஒரு நாள் பாட்டி அவனிடம் என்ன வேண்டுமென்று கேட்க கெண்டகி சிக்கன் வேண்டுமென்று கேட்கிறான். பாட்டி கோழி வாங்க நகருக்குப் போகிறாள். முதன் முறையாக பாட்டியை அன்புடன் கையசைத்து அனுப்பி வைக்கிறான்.
பாட்டி மழையில் நனைந்த படி வீடு திரும்புகிறாள். தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி சாப்பிடு என்கிறாள். அவன் வேகவைத்த கோழி தேவையில்லை வறுத்த கோழிதான் வேண்டுமென்று அடம்பிடித்து அழுகிறான். இரவு எழுந்து பசி பொறுக்காமல் சாப்பிட்டு விடுகிறான்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் முந்தைய நாள் மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. முதன்முறையாக பாட்டி மீது பரிதாபபடுகிறான். பாட்டிக்கு போர்த்தி விடுகிறான். நெற்றியில் ஒத்தடமும் தருகிறான்.

மறுநாள் பாட்டியுடன் நகரத்திற்கு போகிறான். பாட்டி தன் தோட்டத்தின் விளைந்த பூசணிக்காய்களை விற்று அவனுக்கு ஷூ வாங்கி தருகிறாள். ஹோட்டலில் அவனுக்குப் பிடித்தமான உணவுகளை வாங்கித் தருகிறாள். பஸ் ஏறும் போது அவன் சாக்லேட் வேண்டுமென்று கேட்க அதையும் வாங்கித் தருகிறாள். இப்பொழுது ஒருவருக்கு ம்டடுமே பஸ் காசு இருக்கிறது, அவனை ஏற்றி விடுகிறாள்.

பாட்டி மாலை தான் வீடு திரும்புகிறாள். அதன் பிறகு தான் பாட்டி நடந்தே வந்திருக்கிறாளென்பதை அறிந்து மனம் நெகிழ்கிறான். அவளிடமிருந்து அன்புடன் மூட்டையை வாங்கிக் கொள்கிறான். முதன் முறையாக பாட்டி மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது.

தன் வீடருகே இருக்கும் பையனை மாடு விரட்டிவிடுகிறது என்று பொய் சொல்லி கீழே விழ வைக்கிறான். அவன் அடிக்க வர அவன் பாட்டி அடிக்கடி செய்வது போல நெஞ்சில் வட்டமிட்டு கான்பிக்கிறான். மறுநாள் ஷாங்வூவை மாடு உண்மையிலேயே விரட்டி வர அந்தப் பையன் தான் காப்பாற்றுகிறான். அப்போது நேற்று நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். அது தான் நேற்றே மன்னிப்புக் கேட்டு விட்டாயே என்கிறான். அப்போது தான் நெஞ்சில் வட்டமிட்டு காட்டினால் மன்னிப்பு கேட்பது என்று அர்த்தம் என்று தெரிந்து கொள்கிறான்.

பாட்டியின் மீது அன்பு பிறந்த அத்தருணத்தில் அம்மா அழைத்துப் போக வருவதாக எழுதிய கடிதம் வருகிறது.

ஷாங் வூ தானாகவே நிறைய ஊசியில் நூல் கோர்த்து வைக்கிறான்

மறுநாள் ஊருக்கு கிளம்புகிறார்கள். அம்மா பாட்டியிடம் எதாவது சொல்லவேண்டுமா என்கிறாள். ஷாங் வூ அமைதியாக நிற்கிறான். பஸ் வருகிறது. அதில் ஏறுகிறார்கள். பஸ் சிறுது தூரம் போன பிறகு மனம் கேளாத ஷாங் வூ பஸ்ஸின் பின் புற கண்ணாடியில் வழியாக நடந்த அனைத்திற்கும் மன்னிப்புக் கேட்பது போல நெஞ்சில் வட்டமிட்டு காண்பிக்கிறான். அன்புடன் கையை அசைத்து டாட்டா காண்பித்து விடைபெற்றும் கொள்கிறான். உலகிலுள்ள் அத்தனை பாட்டிக்குகளுக்கும் இப்படம் சமர்ப்பணம் என்பதோடு படம் முடிகிறது.

படம் முடியும் போது நம் இதயம் கனத்திருக்கும். நம் மனமும் பால்ய காலத்திற்கு சென்று நம் பாட்டியின் அன்பைத் தேடும்.

தன் வாழ்வின் பெரும் பகுதியை வாழ்ந்து முடிந்து விட்ட அந்த வாய் பேச முடியாத பாட்டி தன் ஏழு வயது பேரனுக்கு எதுவும் பேசாமலே வாழ்வின் நெறிகளான எதையும் எதிர்பார்க்காத அன்பு, பொறுமை கருணை, இயற்கையை நேசிக்கும் குணம், என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறாள்.

வாய் பேச முடியாத அந்த மூதாட்டி ஷாங் வூ கிற்கு மட்டுமல்ல படம்  பார்க்கும் நம் அனைவருக்கும் மெளனத்தின் மூலம் பாடம் கற்றுத் தருகிறாள்.

பல்வேறு விருதுகளையும் உலகம் முழுவதும் நன்மதிப்பையும் பெற்ற  இந்த தென்கொரிய நாட்டுத் திரைப்படம் 2002-இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஒரு பெண். அவர் பெயர் லீ ஷியான் ஹியான்.

கமல் 50

கமல் 50


பெரிதினும் பெரிது கேள்.


* யுகன்

ஐந்து வயதில் தேசிய விருதுடன் தன் திரை வாழ்வைத் தொடங்கிய கமல் ஹாசன் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று அவர் உலக நாயகன் என்று போற்றப்படுகிறார். தயக்கத்துடன் தான் நடிக்கத் துவங்கினேன் என்று கூறும் கமல் இன்று மகத்தான நடிகராக விளங்குகிறார். திரையுலகின் பல்வேறு துறைகளில் தன் அடையாளத்தையும் தனக்கான இடத்தையும் தேடிக்கொண்டிருந்த அவருக்கு நடிப்பதில் இருந்த தயக்கத்தைப் போக்கி சரியான திசையில் திருப்பியவர் இயக்குநர் கே. பாலச்சந்தர்.

கமல் பதினாறு வயதிற்கு முன்னாலே ஒரு ஹீரோவாக நிலை பெற்றுவிட்டாலும் 16 வயதினிலே படம்தான் அவரின் நடிப்பின் மேதமையை வெளிக்காட்டுவதாய் அமைந்தது. அடுத்து சிகப்பு ரோஜாக்கள். இப்படங்களை நடித்து முடித்தபோது அவர் வயது 24. இந்த வயதில் இவ்வளவு அற்புதமாக நடித்தவர் இப்போது, 55 வயதில், நடிப்பில் பல சிகரங்கலை எட்டியிருக்க வேண்டுமல்லவா? உலகம் போற்றும் நடிகராக மாறியிருக்க வேண்டுமல்லவா? அதாவது அவர் ரசிகர்கள் அவரை அன்போடு அழைப்பதுபோல உண்மையிலேயே உலக நாயகனாக ஆகியிருக்க வேண்டுமல்லவா?

இன்று கமல் இந்திய அளவில் முக்கியமான நடிகராகக் கருதப்படுகிறார். இந்திய அளவில் நசீருத்தீன் ஷா, ஓம் பூரி, மம்மூட்டி, மோகன்லால் என்று எத்தனையோ திறமைசாலிகள் இருந்தாலும் பன்முக நடிப்பு - அதுவும் படத்தைத் தோளில் சுமக்கும் நாயக வேடங்களில் - என்று வரும்போது கமல் தன் சமகாலத்தவர்கள் பலரையும்விடச் சில அடிகளாவது முன்னால் நிற்கிறார் என்பதில் சந்தேகமில்லை. அமிதாப் பச்சன், தர்மேந்திரா போன்ற நட்சத்திரங்கள் பன்முக நடிப்பில் தங்கள் திறமையை நிரூபித்திருக்கிறார்கள் என்றாலும், மிகவும் வித்தியாசமான வேடங்கள், வேடங்களுக்கேற்பத் தன்னை மாற்றிக்கொள்வது, எல்லா வகை நடிப்பிலும் காணப்படும் நுட்பமான வெளிப்பாடுகள் என்று பார்க்கும்போது கமலின் திறமை தனித்து நிற்கிறது.

ஆனால் இந்தத் திறமைகள் அவரிடமிருந்து மிகச் சிறந்த சினிமா அனுபவத்தைச் சாத்தியப்படுத்தியிருக்க வேண்டும். சிறந்த படங்கள், அசாத்தியமான பாத்திரங்கள் என்று அவரது எல்லைகளும் பங்களிப்பும் விரிவடைந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஏன் நடக்கவில்லை? இதற்குக் காரணம் என்ன?

தமிழ் சினிமாவின் வணிகச் சூழல் அவரை நட்சத்திரமாக்கிவிட்டது. நட்சத்திரமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் புதிய பரிசோதனைகளை, தேடலை முடக்கிவிட்டது. ஆகவே அவரது திறமை முழுமையாக வெளிப்படாததிற்கு வணிகச் சூழல்தான் காரணம் என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது ஒரு முக்கியமான காரணம்தான். ஆனால் இது மட்டும்தான் கமல் என்னும் கலைஞனின் விகாசத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது என்று சொல்லிவிட முடியுமா? பிற துறைகளில் சாதித்தவர்கள் எப்படிச் சாதித்தார்கள்? அவர்களுக்கு மட்டும் சூழலின் ஒத்துழைப்புக் கிடைத்துவிட்டதா?

செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் இல்லாத நம் தேசத்திலிருந்து உலகம் போற்றும் ஒரு விஸ்வநாதன் ஆனந்த் உருவானது எப்படி? துப்பாக்கி சுடும் போட்டியில் திறமையாளர்களை ஊக்குவிக்கும் சூழல் இல்லாத ஒரு துறையில் அபின்வ் பிந்தரா சாதித்தது எப்படி? பண்டிட் ரவிஷங்கர், பிஸ்மில்லா கான் போன்றவர்கள் உலக அளவில் மதிக்கப்படும் கலைஞர்களாக உருவானது எப்படி? சத்யஜித் ராய் இறுதிவரை கலைஞராக வாழ்ந்துவிடவில்லையா? பதேர் பாஞ்சாலி படமெடுக்க அவர் பட்ட பாடு நாடறியும். அது தானே இந்தியாவில் உன்னதமான சினிமாவைத் தொடங்கிவைத்தது. அடூர் கோபாலகிருஷ்ணன் ஏன் ஒவ்வொரு படம் எடுக்கவும் இவ்வளவு பாடுபட வேண்டும்? ஹாலிவுட் சினிமாவில் மாட்டிக்கொண்டு நல்ல கதாபாத்திரங்களுக்காக ஏங்கி அலைந்தாரே இங்கிரிட் பெர்க்மென். ஒரு தொழிலதிபர் அவரிடம் நட்புக் கொள்ளக் கோடிக்கணக்கான் ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்டுடியோவே வாங்கித் தருகிறேன் என்ற போது அதெல்லாம் எனக்கெதற்கு, எனக்குத் தேவை நல்ல இயக்குனரும் ஒரு நல்ல ஸ்கிரிப்டும்தான் என்று அவர் சொல்லவில்லையா?. “நல்ல படமெடுப்பதற்காக என் சம்பாத்தியம் அனைத்தையும் இழந்தேன். ஆனால் இன்று என் படங்கள் இல்லாத வீடியோ லைப்ரரியே இல்லையென்று விக்டோரியா டிசிகா பெருமைப்பட்டுக்கொள்லவில்லையா?

இந்தக் கேள்விகள் கமல் ஹாசனைக் குறைத்து மதிப்பிடும் நோக்கில் எழுப்பப்படவில்லை. ஆனால் நட்சத்திரமாக ஜொலிப்பதற்காகக் கலைஞனாக வாழ முடியாமல்போனது துரதிருஷ்டவசமானது. கலைஞனாக வாழ்வதா, நட்சத்திரமாக வாழ்வதா என்பதைக் குறிப்பட்ட நபர்தான் முடிவு செய்ய வேண்டும். கலைஞனாக வாழ விரும்பினால காலத்திடம் அதற்கான விலையைத் தந்துதான் ஆக வேண்டும். புதுமைப்பித்தன் எந்த விலை தந்தாரோ அந்த விலையை. தாஸ்தாயெவ்ஸ்கி என்ன விலை தந்தாரோ அந்த விலையை. கலைஞனாக வாழ்வது அத்தனை எளிதன்று. அதுவும் தமிழ் சினிமாவில். தவிர, வெற்றியும் கலை உணர்வும் இசைந்துபோவது தமிழில் மட்டுமல்ல, எங்குமே கடினமான விஷயம்தான். இந்தப் பின்னணியில்தான் ஒருவரது இலக்கு என்ன என்பது குறித்த கேள்வி எழுகிறது.

உலக அளவில் சிறந்த நடிகனாக அறியப்பட வேண்டுமென்றால், சாதிக்க வேண்டுமென்றால், அதற்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். கமலை ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்று அழைத்து நாம் பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் உண்மையிலேயே இந்தப் பட்டங்களுக்குத் தகுதியானவராக ஆக வேண்டும் என்று அவர் நினைத்தால் தமிழகச் சூழலில் பெருவாரியான மக்களைக் கவர்ந்து வசூலைக் குவிக்கும் படங்களை மட்டும் நம்பியிருந்தால் போதாது. நம்மிடம் மகத்தான தொழில்நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். கதாசிரியர்கள் இருக்கிறார்கள். இயக்குநர்கள் இருக்கிறார்கள். நடிப்பதற்குக் கமல் இருக்கிறார். வேறு என்ன தேவை சர்வதேச விருதுகளை வெல்ல?

கான் விருது சிறந்த கலை முயற்சிகளுக்காகக் கொடுக்கப்படும் விருது. ஆஸ்கார் விருது என்பது வெகுஜனத் திரைப்படங்களுக்கானது. அது அமெரிக்கப் படங்களுக்கு அமெரிக்கர்களே கொடுத்துக்கொள்வது. ஆனால் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கார் விருது பிரிவு ஒன்றிருக்கிறது. அதில் இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு விருது கொடுத்திருக்கிறார்கள். அதில் குறைந்த பட்சம் 40 படங்களாவது மகத்தான படங்கள் என்று கூறிவிட முடியும் (பை சைக்கிள் தீவ்ஸ், ரஷோமான், லாஸ்ட்ரடா, ஃபர்பிடன் கேம்ஸ், தி வர்ஜீன் ஸ்பிரிங், நோ மேன்ஸ் லேண்ட் ஆகியவை சில உதாரணங்கள்). இந்தப் படங்களுக்குப் பக்கத்தில் வைத்துப் பேசக்கூடிய அசலான படம் எதிலேனும் கமல் இதுவரை நடித்திருக்கிறாரா? இவற்றோடு ஒப்பிடக்க்கூடிய படங்களை எடுக்கும் இயக்குநர்கள் ஒரு சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள் (உதாரணம் அடூர்). அவர்கள் படங்களில் கமல் நடிக்காமல் போனதற்குக் காரணம் என்ன?

நட்சத்திர அந்தஸ்துக்கேற்ற படங்களில் நடித்துக் கமல் பொருளும் புகழும் சம்பாதிப்பதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் உலக நாயகன் என்று புகழப்படும் அவர் அந்தப் புகழ்ச்சிக்கு நியாயம் செய்யும் விதத்தில் அவ்வப்போது சில படங்களில் நடிக்கலாமே என்பதுதான் கமலிடம் அதிகமாக எதிர்பார்ப்பவர்களின் ஆதங்கம். திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவதற்கு என்றே கமல் நடிப்பில் ஏன் படம் தயாரிக்கப்படக் கூடாது? சர்வ தேசப் போட்டியில் போட்டியில் ஜாம்பவன்களோடு மோதி விருது வென்று வரும் வாய்ப்பு அவருக்கு ஏன் கிடைக்கக் கூடாது?

இதுபோன்ற படங்கள் இங்கே ஓடாது என்று சொல்லப்படுவதில் முழு உண்மை இல்லை. வங்காளத்தில் ராயின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்ட ஒரே வாரத்தில் தியேட்டர்க்காரர்கள் படத்தைத் தூக்கிவிட்டார்கள். அது கான் விருது வென்ற பிறகு மீண்டும் அவர்களே திரையிட்டார்கள். படம் நூறு நாட்கள் தாண்டி ஓடியது.

இயக்குனர் மகேந்திரன் ஒரு முறை கூறியது போன்று உலக சினிமா எடுப்பது ஒன்றும் சீனப் பெருஞ்சுவர் கட்டுவதுபோலக் கடினமான காரியம் இல்லை. ‘தி வே ஹோம்’ என்னும் கொரியப் படத்தில் பேரன் பாட்டிக்கு ஊசியில் நூல் கோர்த்துக் தருவது போன்றதுதான் என்றார். நாம் உலக அளவில் விருதுகளை வென்றால் தமிழ்ப் படங்களின் நிலைமை மாறும்.

வெற்றுக் கால்களுடன் மராத்தானில் ஓடித் தங்கம் வென்ற அந்த எத்தியோப்பிய வீரனால் ஒரு இனம் எழுச்சி கொள்ளவில்லையா? அது போன்ற சர்வதேச விருதுகளை பெறும் போது நம் இனமும் எழுச்சி கொள்ளும்.

டிசிகா சொல்வதுபோல, “கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து வணிகப் படங்களை எடுப்பதை விட அதே பணத்தில் எட்டு பை சைக்கிள் தீவ்ஸ்களை எடுத்துவிடலாம். பணமும் திரும்ப வரும். மகத்தான படங்க்ளும் கிடைக்கும்”.

வெறும் 75 லட்ச ரூபாயில் எடுக்கப்பட்ட படம்தான் சில்ட்ரன் ஆஃப் ஹெவன். அப்படம் பெறாத பாராட்டுக்கள் இல்லை. விருதுகள் இல்லை. செலவழித்த பணத்துடன் பல மடங்கு பணத்தையும் அது திரும்பக் கொண்டுவந்தது.
‘அபாராஜிதோ’ படம் உள்ளூரில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தைத் திரைப்பட விழாவில் வென்ற விருது சரிக்கட்டியது என்று சத்யஜித் ராய் சொல்லியிருக்கிறார். அதனால் பண நஷ்டம், விநியோகஸ்தர்கள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.

உலக அளவில் இந்திய சினிமா என்றாலே சத்தியஜித் ராய்தான். ராய் மாபெரும் இயக்குநர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழில் அப்படி யாரும் உருவாக முடியாதா? தாகூர் பெற்ற நோபல் பரிசைப் பந்தயப் பொருளாக வைத்து அவருடன் கவிபாடி வென்று அப்பரிசை அவரே எனக்குத் தரும்படிச் செய்வேன் என்று சொன்னானே பாரதி, அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையும் முனைப்பும் உடையவர்கள் யாரும் இங்கு இல்லையா? பெரிதினும் பெரிது கேள் என்றான் மகாகவி. நாமும் பெரிய இலக்குகளை வகுத்துக்கொண்டு அதற்காகப் போராட வேண்டும்.

ஆயிரம் மைல் பயணம் காலடி நிலத்திலிருந்துதான் தொடங்குகிறது.

இதற்கான முயற்சிகளை இப்பொழுது எடுக்கத் தொடங்கினால் இன்னும் நாலைந்து ஆண்டுகளில் கமல் தமிழ்ப் படத்திற்காக ஆஸ்காரோ, கான் விருதோ வென்று வரும் நிலை உருவாகலாம். அப்போது அந்த உலக நாயகனை வரவேற்க மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மாபெரும் கூட்டம் அலைமோதும் என்பதில் ஐயமில்லை.

**

தி ரோடு ஹோம்


தி ரோடு ஹோம்.
 
தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு நகரத்திலிருந்து தன் மலையோரக் கிராமத்திற்கு வருகிறான் யுசெங். அவனின் தந்தை ஷாங்க் யூ அந்தக் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசியராகப் பணிபுரிந்தவர். அவரின் உடல் தற்போது கிராமத்திலிருந்து 40 கி.மீ. தள்ளியிருக்கும் மருத்துவமனையில் இருக்கிறது. கார் வைத்து உடலை கொண்டு வராமல் ஆட்கள் சுமந்தே கொண்டு வரவேண்டுமென்கிறார்கள் அவனின் அம்மா. உடலை தேரில் வைத்து நடந்தே தூக்கி வந்தால் வீட்டிற்கு வரும் பாதையை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். அது கடும் பனிக்காலம் கிராமத்தில் இருக்கும் ஆட்களும் மிகக்குறைவு. இருந்தும் ஆசிரியரின் மீது கொண்ட அன்பினால் அவ்வாறு செய்யக் கிராமத்தினர் ஒத்துக்கொள்கின்றானர். பின் அவனின் அம்மா, தந்தையின் சவப்பெட்டியின் மீது விரிக்க தன் கைப்பட சிவப்புத்துணி நெய்ய வேண்டுமென்று சொல்லி நெடுநாட்களாக பழுதுபட்டுக்கிடக்கும் தறியை சரி செய்யச்சொல்கிறாள். அந்த தள்ளாத வயதிலும் தன் கையாலேயே நெய்கிறாள்.

வீட்டின் ஒரு அறைக்குள் நுழையும் யுசெங், தன் அப்பா,அம்மா சிறுவயதில் எடுத்த போட்டோவைப் பார்க்கிறான். அவள் பெற்றோர்களின் காதல் கதை ஊர்முழுதும் தெரிந்த விசயம். அவர்களின் காதல் பற்றி பேசாத ஊர்க்காரர்களே இல்லை. அக்கதையை யூசெங் சொல்லத்தொடங்குகிறான்.   காட்சி மாறி கதை அந்தக் காலத்திற்குச் செல்கிறது.

யுசெங்கின் தந்தை ஷாங்க்யூ பள்ளிக்கூடமே இல்லாத அக்கிராமத்திற்கு வருகிறார். யுசெங்கின் அம்மா ஷாவோ ஆசிரியர் சாங்க்யுவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறாள். அவர் வந்தபின் சிறு பள்ளிக்கூடம் கட்டத் தொடங்குகின்றனர். சீனா கம்யூனிச நாடு என்பதால் பள்ளிக்கூடம் கட்டுவதில் கிராமத்தினர் அனைவருமே ஈடுபடுகின்றனர். கட்டிட வேலையில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களின் வேலை சமைத்து தருவது மட்டும்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலை செய்பவர்களுக்கு உணவு போகும் முதலில் வைத்திருக்கும் உணவை ஆசிரியர் எடுத்துக்கொள்வார் என்று தெரிந்ததும் ஷாவோ மறுநாளிலிருந்து மற்ற உணவுகளை தள்ளிவைத்துவிட்டு தன் உணவுப் பாத்திரத்தை வைக்கிறாள். ஊரில் ஒவ்வொருவரும் ஆசிரியரை வீட்டிற்கு விருந்தழைப்பார்கள் அன்று ஷாவோவின் முறை. ஷாங்க்யூவிற்கு பரிமாறுகிறாள். அவளின் உணவைச் சாப்பிட்ட பிறகு, தினமும் இவள் செய்த உணவைத் தான் சாப்பிட்டோம் என்று உணர்ந்து கொள்கிறார். பல சந்திப்பிற்குப் பிறகு அவரும் இவள் மீது காதல் கொள்கிறார். ஒரு நாள் அவருக்கு வெளியூரிலிருந்து அழைப்பு வர அவர் போய் விடுகிறார். அவரைப் பிரிந்து இருக்க முடியாமல் ஷாவோ தவிக்கிறாள். கடும் பனி பொழியும் நேரத்திலும் ஊருக்கு வரும் பாதையில் போய் அவர் வருகிறாரா எனப் பார்க்கிறாள். உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. அவளின் நிலையை அறிந்த ஊர்க்காரர்கள், ஆசிரியரை திரும்ப ஊருக்கு அழைத்து வருகின்றனர். இருவரும் இணைகின்றனர். அதன் பிறகு அந்த 40 வருடத்தில் ஒரு நாள் கூட இணை பிரியாது வாழ்கின்றனர்.

கதை முடிந்து நிகழ் காலத்திற்கு வருகிறது ஆசிரியர் ஷாங்க்யுவின் உடலை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தோளில் வைத்து தூக்கிவருகின்றனர். பள்ளியின் அருகிலேயே புதைக்கின்றனர் சடங்குகள் முடிந்து யுசெங் ஊயிருக்குக் கிளம்பும்போது தன் அம்மாவை தன்னுடன் நகரத்திற்கு வந்து விடுமாறு கூப்பிடுகிறான். உன் தந்தையின் குரல் தன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று சொன்னவள் ஊரை விட்டு வரமாட்டேன் என்கிறார். விரைவில் அப்பள்ளியை இடித்துவிட்டு புதியபள்ளி கட்டப்போவதால் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் பின் அவனுடன் பள்ளிக்கு வருகிறாள். அப்போது உன் தந்தை உன்னை ஆசிரியராக்க வேண்டுமென்று தான் நினைத்தார். அதனால் உன் தந்தை போன்று நீ ஒரு நாளாவது பாடம் நடத்தவேண்டும் என்கிறாள். அப்புறம் வழக்கம் போல நகரத்திற்குபோய் உன் வேலையைச் செய் என்கிறாள்.

மறுநாள் யுசெங் பாடம் நடத்துகிறான். வேலை செய்து கொண்டிருந்த அம்மா குரல் கேட்டு வீட்டிலிருந்து பள்ளி நோக்கி ஓடி வருகிறாள். கிராமத்திலிருந்து பலர் பள்ளி முன்பு ஏற்கனவே கூடியிருக்கிறனர். தன் அப்பாவிற்காகவும், அம்மாவிற்காகவும் தான் பாடம் நடத்துவதற்காகச் சொல்கிறான். தன் தந்தை சொந்தமாக உருவாக்கிய பாடம் புத்தகத்தை வைத்து வகுப்பு எடுக்கிறான். அப்புத்தகத்தை வைத்துத்தான் அவரும் தன் முதல் வகுப்பை எடுத்தார். அவன் குரல் கேட்டு அம்மா கண் கலங்குகிறாள். அவன் குரலின் மூலம் தன் கணவனின் நினைவுக்கு ஆட்படும் அவள், இளம் பெண்ணாக மலைப்பாதையில் சந்தோஷமாக ஓடுவதோடு படம் முடிவடைகிறது.

காதல் வாழ்வின் அழியாத விசயங்களில் ஒன்று. காலம் கடந்த பிறகும் அது அழியாது ஜீவித்து நிற்கிறது. ஷாவோவின் காதல் அத்தனை புனிதமானது ஷாங்க்யுவின் மீது அவள் கொண்ட காதல் அளவிட முடியாது. அவனைப் பார்த்த முதல் நொடியிலிருந்து காதலிக்கத் தொடங்கியவள் வாழ்நாள்முழுவதும் அவன்மீது காதல் கொண்டவளாகவே இருக்கிறாள். காதல் கனவு நிறைந்தது என்பதால் படத்தின் பழைய காதல் நினைவுகள் வண்ணத்திலும் பிற நிகழ்காலக் காட்சிகள் அனைத்தும் கறுப்பு வெள்ளையிலும் படமாக்கப்பட்டிருப்பது கவித்துவமானது. நல்ல காதலி கிடைத்தவன் பூமியிலேயே சொர்ககத்தைக்காண்பான் என்பார்கள் ஷாங்க்யுவிற்கும் ஷாவோ என்னும் அற்புதமான காதலி கிடைத்திருக்கிறாள். படம் பார்க்கையில் நம் மனதும் கடந்த காலத்தை நோக்கி சிறகடிக்கப்பதை தவிர்க்க இயலாது.

பல விருதுகளையும் பெரும் நன் மதிப்பையும் பெற்ற இந்தச் சீனத் திரைப்படம் 1999 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஷாங்க்யுமு.