Friday, September 3, 2010

தி ரோடு ஹோம்


தி ரோடு ஹோம்.
 
தன் தந்தையின் மரணச் செய்தி கேட்டு நகரத்திலிருந்து தன் மலையோரக் கிராமத்திற்கு வருகிறான் யுசெங். அவனின் தந்தை ஷாங்க் யூ அந்தக் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆசியராகப் பணிபுரிந்தவர். அவரின் உடல் தற்போது கிராமத்திலிருந்து 40 கி.மீ. தள்ளியிருக்கும் மருத்துவமனையில் இருக்கிறது. கார் வைத்து உடலை கொண்டு வராமல் ஆட்கள் சுமந்தே கொண்டு வரவேண்டுமென்கிறார்கள் அவனின் அம்மா. உடலை தேரில் வைத்து நடந்தே தூக்கி வந்தால் வீட்டிற்கு வரும் பாதையை அவர்கள் மறக்கமாட்டார்கள் என்பது ஐதீகம். அது கடும் பனிக்காலம் கிராமத்தில் இருக்கும் ஆட்களும் மிகக்குறைவு. இருந்தும் ஆசிரியரின் மீது கொண்ட அன்பினால் அவ்வாறு செய்யக் கிராமத்தினர் ஒத்துக்கொள்கின்றானர். பின் அவனின் அம்மா, தந்தையின் சவப்பெட்டியின் மீது விரிக்க தன் கைப்பட சிவப்புத்துணி நெய்ய வேண்டுமென்று சொல்லி நெடுநாட்களாக பழுதுபட்டுக்கிடக்கும் தறியை சரி செய்யச்சொல்கிறாள். அந்த தள்ளாத வயதிலும் தன் கையாலேயே நெய்கிறாள்.

வீட்டின் ஒரு அறைக்குள் நுழையும் யுசெங், தன் அப்பா,அம்மா சிறுவயதில் எடுத்த போட்டோவைப் பார்க்கிறான். அவள் பெற்றோர்களின் காதல் கதை ஊர்முழுதும் தெரிந்த விசயம். அவர்களின் காதல் பற்றி பேசாத ஊர்க்காரர்களே இல்லை. அக்கதையை யூசெங் சொல்லத்தொடங்குகிறான்.   காட்சி மாறி கதை அந்தக் காலத்திற்குச் செல்கிறது.

யுசெங்கின் தந்தை ஷாங்க்யூ பள்ளிக்கூடமே இல்லாத அக்கிராமத்திற்கு வருகிறார். யுசெங்கின் அம்மா ஷாவோ ஆசிரியர் சாங்க்யுவைப் பார்த்ததுமே காதல் கொள்கிறாள். அவர் வந்தபின் சிறு பள்ளிக்கூடம் கட்டத் தொடங்குகின்றனர். சீனா கம்யூனிச நாடு என்பதால் பள்ளிக்கூடம் கட்டுவதில் கிராமத்தினர் அனைவருமே ஈடுபடுகின்றனர். கட்டிட வேலையில் பெண்களை அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அவர்களின் வேலை சமைத்து தருவது மட்டும்தான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வேலை செய்பவர்களுக்கு உணவு போகும் முதலில் வைத்திருக்கும் உணவை ஆசிரியர் எடுத்துக்கொள்வார் என்று தெரிந்ததும் ஷாவோ மறுநாளிலிருந்து மற்ற உணவுகளை தள்ளிவைத்துவிட்டு தன் உணவுப் பாத்திரத்தை வைக்கிறாள். ஊரில் ஒவ்வொருவரும் ஆசிரியரை வீட்டிற்கு விருந்தழைப்பார்கள் அன்று ஷாவோவின் முறை. ஷாங்க்யூவிற்கு பரிமாறுகிறாள். அவளின் உணவைச் சாப்பிட்ட பிறகு, தினமும் இவள் செய்த உணவைத் தான் சாப்பிட்டோம் என்று உணர்ந்து கொள்கிறார். பல சந்திப்பிற்குப் பிறகு அவரும் இவள் மீது காதல் கொள்கிறார். ஒரு நாள் அவருக்கு வெளியூரிலிருந்து அழைப்பு வர அவர் போய் விடுகிறார். அவரைப் பிரிந்து இருக்க முடியாமல் ஷாவோ தவிக்கிறாள். கடும் பனி பொழியும் நேரத்திலும் ஊருக்கு வரும் பாதையில் போய் அவர் வருகிறாரா எனப் பார்க்கிறாள். உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது. அவளின் நிலையை அறிந்த ஊர்க்காரர்கள், ஆசிரியரை திரும்ப ஊருக்கு அழைத்து வருகின்றனர். இருவரும் இணைகின்றனர். அதன் பிறகு அந்த 40 வருடத்தில் ஒரு நாள் கூட இணை பிரியாது வாழ்கின்றனர்.

கதை முடிந்து நிகழ் காலத்திற்கு வருகிறது ஆசிரியர் ஷாங்க்யுவின் உடலை கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும் தோளில் வைத்து தூக்கிவருகின்றனர். பள்ளியின் அருகிலேயே புதைக்கின்றனர் சடங்குகள் முடிந்து யுசெங் ஊயிருக்குக் கிளம்பும்போது தன் அம்மாவை தன்னுடன் நகரத்திற்கு வந்து விடுமாறு கூப்பிடுகிறான். உன் தந்தையின் குரல் தன் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்று சொன்னவள் ஊரை விட்டு வரமாட்டேன் என்கிறார். விரைவில் அப்பள்ளியை இடித்துவிட்டு புதியபள்ளி கட்டப்போவதால் கடைசியாகப் பார்த்துக்கொள்ளலாம் பின் அவனுடன் பள்ளிக்கு வருகிறாள். அப்போது உன் தந்தை உன்னை ஆசிரியராக்க வேண்டுமென்று தான் நினைத்தார். அதனால் உன் தந்தை போன்று நீ ஒரு நாளாவது பாடம் நடத்தவேண்டும் என்கிறாள். அப்புறம் வழக்கம் போல நகரத்திற்குபோய் உன் வேலையைச் செய் என்கிறாள்.

மறுநாள் யுசெங் பாடம் நடத்துகிறான். வேலை செய்து கொண்டிருந்த அம்மா குரல் கேட்டு வீட்டிலிருந்து பள்ளி நோக்கி ஓடி வருகிறாள். கிராமத்திலிருந்து பலர் பள்ளி முன்பு ஏற்கனவே கூடியிருக்கிறனர். தன் அப்பாவிற்காகவும், அம்மாவிற்காகவும் தான் பாடம் நடத்துவதற்காகச் சொல்கிறான். தன் தந்தை சொந்தமாக உருவாக்கிய பாடம் புத்தகத்தை வைத்து வகுப்பு எடுக்கிறான். அப்புத்தகத்தை வைத்துத்தான் அவரும் தன் முதல் வகுப்பை எடுத்தார். அவன் குரல் கேட்டு அம்மா கண் கலங்குகிறாள். அவன் குரலின் மூலம் தன் கணவனின் நினைவுக்கு ஆட்படும் அவள், இளம் பெண்ணாக மலைப்பாதையில் சந்தோஷமாக ஓடுவதோடு படம் முடிவடைகிறது.

காதல் வாழ்வின் அழியாத விசயங்களில் ஒன்று. காலம் கடந்த பிறகும் அது அழியாது ஜீவித்து நிற்கிறது. ஷாவோவின் காதல் அத்தனை புனிதமானது ஷாங்க்யுவின் மீது அவள் கொண்ட காதல் அளவிட முடியாது. அவனைப் பார்த்த முதல் நொடியிலிருந்து காதலிக்கத் தொடங்கியவள் வாழ்நாள்முழுவதும் அவன்மீது காதல் கொண்டவளாகவே இருக்கிறாள். காதல் கனவு நிறைந்தது என்பதால் படத்தின் பழைய காதல் நினைவுகள் வண்ணத்திலும் பிற நிகழ்காலக் காட்சிகள் அனைத்தும் கறுப்பு வெள்ளையிலும் படமாக்கப்பட்டிருப்பது கவித்துவமானது. நல்ல காதலி கிடைத்தவன் பூமியிலேயே சொர்ககத்தைக்காண்பான் என்பார்கள் ஷாங்க்யுவிற்கும் ஷாவோ என்னும் அற்புதமான காதலி கிடைத்திருக்கிறாள். படம் பார்க்கையில் நம் மனதும் கடந்த காலத்தை நோக்கி சிறகடிக்கப்பதை தவிர்க்க இயலாது.

பல விருதுகளையும் பெரும் நன் மதிப்பையும் பெற்ற இந்தச் சீனத் திரைப்படம் 1999 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஷாங்க்யுமு.

No comments:

Post a Comment