Sunday, August 8, 2010

                                  லைப் இஸ் பியூட்டிஃபுல்
                                                                     
                                                                        யுகன்



வாழ்வின் அழகு

கதையின் நாயகன் கிய்தோ இத்தாலியில் உள்ள கிராமத்திலிருந்து நகரில் புத்தகக்கடை ஒன்று திறக்கும் கனவோடு தன் நண்பன் ஃபெரூச்சியோவுடன் வருகிறான். வரும் வழியில் அவர்கள் வந்த கார் ரிப்பேராகிறது. ஒரு பண்ணை வீட்டருகே நின்று ரிப்பேர் செய்யும் போது நாயகி தோராவைச் சந்திக்கிறான். அவர்களுடான ஒரு இனிய சந்திப்பு நிகழ்கிறது. கிய்தோ அபார நகைச்சுவை திறன் உடையவன். தொடர்ந்த பல சந்திப்புகளில் தோராவின் மனம் கவர்கிறான். மழை பெய்து முடிந்த ஓரிரவில் தன் காதலை அவளிடம் சொல்கிறான். அவள் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக கேட்டுக் கொள்கிறாள். மறுநாள் அவருக்கு நிசசயதார்த்தம். அவன் வேலை செய்யும் ஹோட்டலில் தான் நிச்சயதார்த்த விழா நடக்கிறது. தோரா அங்கிருந்து தன்னை அழைத்துச் செல்லும் படி கூறுகிறாள்.

அவர்களுடைய மகிழ்ச்சியான திருமணவாழ்க்கை தொடங்குகிறது வருடங்கள் சட்டென பறந்தோடி விடுகிறது. கிய்தோ தோராவுக்கு இப்பொழுது ஜோஸ்வா என்னும் ஐந்து வயது மகன் இருக்கிறான். கிய்தோவும் தான் நினைத்தது போலவே புத்ததக்கடை திறந்து விடுகிறான். சிறிய வீடு, சைக்கிள் தான் அவர்களது வாகனம். எளிய அழகான வாழ்க்கை என அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாய் போய்க்கொண்டிருக்கிறது. அம்மகிழ்ச்சியைக் குலைப்பது போல ஹிட்லரின் நாஜிப்படைகள் நகருக்குள் நுழைகின்றன.

ஜோஸ்வாவின் பிறந்த நாளன்று கிய்தோ, ஜோஸ்வா, கிய்தோவின் மாமா உள்ளிட்ட பல யூதக் குடும்பங்களை நாஜிப்படை சித்திரவதை முகாமிற்கு அழைத்துச் செல்கிறது. தோரா ஜெர்மானியப் பெண்ணாக இருந்தாலும் தன் கணவன் குழந்தை போக இருக்கும் சித்திரவதை முகாமிற்கு போகத் துணிகிறாள்.
ஆண்கள் ஒரு புறம் பெண்கள் புறம் மாட்டுக்கொட்டகளைப் போன்ற இடத்தில் தங்க வைத்து கடுமையாக வேலைவாங்கப்படுகின்றனர்.ஒருவர் எந்த நிமிடமும் கொல்லப்படலாம் என்ற சூழ்நிலைதான் அங்கு நிலவுகிறது.

கிய்தோ தன் ஐந்து வயது மகன் சித்திரவை முகாமின் இந்தக் கொடுமை கண்டு பயந்து விடக் கூடாதென்பதற்காக நடக்கும் கொடுமைகள் அனைத்தையும் விளையாட்டு என்கிறான். விளையாட்டில் ஆயிரம் புள்ளிகள் எடுத்தால் புத்தம் புதிய பீரங்கி வண்டி பரிசு என்கிறான். ஜோஸ்வாவும் அதை நம்புகிறான். கிய்தோ ஜோஸ்வாவிடம் அனைத்தும் விளையாட்டு என்று வெறுமனே சொல்லிவிடுவதோடு நில்லாமல் அதை அவன் நம்ப வைக்க கிய்தோ எடுக்கும் பிரயத்தனங்கள் தான் திரைப்படத்தை உன்னதமான இடத்திற்கு எடுத்துச்செல்கிறது.

கிய்தோ இப்படத்தில் தொடர்ந்து இரண்டு விஷயங்களைச் செய்வார். ஒன்று தோரா தன் காதலியாக இருந்த போதும், மனைவியாக ஆன பிறகும் அவளைத் தொடர்ந்து வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பார். மற்றொன்று தன் மகன் ஜோஸ்வாவிடம் நடக்கும் அனைத்தும் விளையாட்டுத்தான் தொடர்ந்து நீரூபித்துக் கொண்டே இருப்பார். கிய்தோவின் அன்பு நிகரற்றது. இறுதியில் தன் மனைவியைக் காப்பாற்றும் முயற்சியில் வீரர்களிடம் பிடிபட்டுவிடுவார். தன் மகன் ஒளிந்திருக்கும் இடத்தின் வழியாக தான் வீரன் அவரைக் கொல்வதற்காக அழைத்துப் போவான். மரண வாயிலுக்குப் போகும்போது ஒளிந்திருக்கும் தன் மகன் பார்ப்பான் என தெரிந்து இதுவும் ஒரு விளையாட்டுதான் என்று நீருபிக்க கையை காலை ஆட்டி புன்னகையுடன் லெப்ட் ரைட் போட்டு நடப்பார். மகனும் அது கண்டு சிரிப்பான். அக்காட்சி நமமை கலங்க வைக்கும்.

போர் முடிகிறது. நேசப்படை கைதிகளைக் அழைத்துச்செல்ல வருகிறது. ஜோஸ்வா முன்னால் பெரிய பீரங்கி வண்டி வந்ததும் தந்தை சொன்னது உண்மையென கூக்குரலிடுவான். நேசப்படை வீரன் பீரங்கி வண்டியில் ஜோஸ்வாவை ஏற்றுக் கொள்கிறான். கூட்டத்தில் தன் அம்மாவைப் பார்த்ததும் அவளை நோக்கி தாவி ஓடுகிறான். தோரா அவனை முத்த மழையில் நனைக்கிறாள். ஜோஸ்வா தன் தந்தை இறந்ததை அறியாது ‘நானும் அப்பாவும் 1000 பாயிண்ட்ஸ் எடுத்து பீரங்கி வண்டியை ஜெயித்துவிட்டோம் என்று ஆர்ப்பரிக்கிறான். காட்சி உறைந்து படம் முடிகிறது. படம் முடிகையில்

கிய்தோவின் அன்பை, தியாகத்தை நினைத்து நம் கண் கலங்கி மனம் கனத்துவிடும். கிய்தோ இப்படத்தில் பார்வையாளர்களுக்கும் தன் மகன் ஜோஸ்வாவுக்கும் நேரடியாக அறிவுரை கூறாமல் வாழ்க்கையையே விளையாட்டுக் களமாக்கி பல விஷயங்களை சொல்லாமல் சொல்லிப் போகிறார்.

இந்த இத்தாலிய நாட்டுத் திரைப்படம் 1997 –ல் வெளியானது. இப்படம் ஆஸ்கார், கான் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறது. இப்படத்தின் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியிருப்பவர் ராபர்டோ பெனினி.
ஆங்கிலமொழி அல்லாத பிற மொழிப் படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது பெற்ற ஓரே நடிகர் இவர் தான்.

மனதை நெகிழவைக்கும் இந்த அற்புதமான படத்தை நீங்களும் ஒரு முறை பார்க்க வேண்டும்.
.

No comments:

Post a Comment