Sunday, August 8, 2010

                                    சில்ட்ரன் ஆஃப் ஹெவன்
                                                                      
                                                                      யுகன்

மூன்றாவது பரிசுக்காக ஓடிய  கால்கள்.





அலி, தன் தங்கையின் ‘ஷூ’ வை, தைக்கப்போன இடத்தில் அதைத் தொலைத்துவிடுகிறான். தங்கையிடம் அதைச் சொல்ல அவள் அழுகிறாள். அப்பாவிடம் சொன்னால் இருவருக்கும் அடி கிடைக்கும் என்ற பயத்தாலும், அப்பாவிடம் தற்போதைக்கு பணமில்லை, நாம் ‘ஷூ’ கேட்டால் அவர் கடன்தான் வாங்க வேண்டும் என்ற பொறுப்புணர்வாலும் ‘ஷூ’ தொலைந்த விஷயத்தை அப்பா, அம்மாவிற்கு தெரியாமல் மறைக்கிறார்கள். அலியின் ‘ஷூ’ வையே இருவரும் போட்டுக் கொள்வதென முடிவெடுக்கிறார்கள். ஈரானில் காலையில் சிறுமிகளுக்கு, மதியம் பையன்களுக்கு பள்ளிக்கூடம் என்ற முறை இருக்கிறது.
அதனால் காலையில் தங்கை ஜாரா, ‘ஷூ’ வைப் போட்டுக் கொண்டு பள்ளி போய் வந்த பின் மதியம் இவன் போட்டுப் போவான். அதிலும் பல தடைகள், அதையும் அவர்கள் கடக்கிறார்கள்.

ஒரு முறை தன் தந்தையுடன் நகரத்தில் போய் பெரும் பணம் சம்பாதிக்கும் போது தன் தந்தையிடம், தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி விடலாம் என்கிறான். விபத்தினால். பணம் செலவாகி விட அக்கனவு கலைகிறது.

பள்ளியில் ஒட்டப்பந்தயப் போட்டியில் மூன்றாவது பரிசு ‘ஷூ’ என்றதும் போட்டியில் கலந்து கொள்கிறான். உலகமே முதலாவதாக வரத் துடித்துக் கொண்டிருக்கும் போது அலி மூன்றாவதாக ஓடி வந்து ‘ஷூ’ வை அடைவது தான் லட்சியம் என்றிருக்கிறான்.

தன் பள்ளிக்கும், வீட்டுக்கும் ஓடும் தங்கையின் ஒட்டத்தை நிறுத்துவதற்காக அலி ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறான். ஆனால், அவன் விரும்பியது போல் அல்லாது முதலாவதாக வந்து விடுகிறான். வெற்றி பெற்றும் தான் விரும்பிய பரிசை அடைய முடியாததால், தோல்வியாளனைப் போல அழுகிறான்.

அக்குழந்தைகளின் பரிசுத்தமான அன்பு, தியாகம், கருணை, நட்பு, நம் மனதை நெகிழச் செய்யும். இப்படம் அசல் சிறுவர் படம். ஆனால், பெரியவர்களையும் இடத்தைவிட்டு அசையாது பார்க்கச்செய்யும். உலகம் முழுவதும் பெரும் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்ற படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி. இவர் உலக சினிமாவின் முக்கியமான இயக்குநர்.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஈரான் படம் இது தான்.

No comments:

Post a Comment