Sunday, August 8, 2010

தி 400 புளோஸ்

யுகன்.

வகுப்பறையில் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறுவன் தன் மேசையிலிருந்து ஒரு பெண்ணின் கவர்ச்சிப்படத்தை எடுத்து இன்னொருவனிடம் கொடுக்கிறான். அந்தப் படம் ஒவ்வொரு மேசையாக கடந்து வந்து அன்த்வானிடம் வருகிறது. அவன் பார்க்கும் போது ஆசிரியர் பார்த்து விடுகிறார். அவனை அழைத்து வகுப்பறையின் ஓரத்தில் நிற்கச் சொல்கிறார். அந்த வகுப்பு முடிந்த போதும் அங்கிருந்து நகரக்கூடாது என்கிறார். அன்த்வான் செய்யாத தவறுக்குத் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்று சுவரில் எழுதுகிறான். அதைப்பார்த்த ஆசிரியர் அதற்கும் அடிக்கிறார்.


மறுநாள் காலை தாமதமாக எழுந்தவன் அவசர அவசரமாக பள்ளிக்குக் கிளம்புகிறான். பள்ளிக்கு போகும் வழியில் நண்பன் ரெனேவைச் சந்திக்கிறான். இப்பவே லேட் ஆகியிருச்சு வாத்தியார் நம்மை உள்ளே விட மாட்டாரு பேசாம சினிமாவுக்குப் போய்விடலாம் என்று கிளம்புகின்றனர். படம் பார்த்த பின் ஜாலியாக ஊர் சுற்றுகின்றனர். அப்போது தன்னுடைய அம்மா இன்னொருவருடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்துவிடுகிறான். அம்மாவும் இவனைப் பார்த்துவிடுகிறாள்.

அன்று இரவு அப்பா மட்டும் தனியாக வீட்டுக்கு வருகிறார். அவரே உணவு தயாரித்து அன்த்வானைச் சாப்பிடச் செய்கிறார். இரவு அது சம்பந்தமாக இருவருக்கும் சண்டை வருகிறது. அவனை உங்களால பார்த்துக்க முடியாட்டா பேசாம ஹாஸ்டல்ல சேர்த்திருங்க என்கிறாள். அந்த்வான் இதையெல்லாம் கேட்டபடியே படுத்திருக்கிறான். காலையில் அன்த்வான் பள்ளிக்குக் கிளம்பிய பிறகு அவனிடம் அடிவாங்கிய வகுப்புப் பையன் அவர்கள் வீட்டில் வந்து நேற்று பள்ளிக்குப் போகாத விசயத்தைச் சொல்லிவிடுகிறான். அப்பா கோபமடைகிறார்.

நேத்து பள்ளிக்கு வராததிற்கு என்ன பொய் சொல்லப் போற என்கிறார் ஆசிரியர். அம்மா செத்துட்டாங்க என்று சொல்கிறான். அதிர்ந்து போன ஆசிரியர் அவனுக்கு ஆறுதல் சொல்லி அமரவைக்கிறார். வகுப்பு ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் அவனது அம்மாவும் அப்பாவும் வருகின்றனர். அவனை ரெண்டு அறைவிடும் அப்பா நைட் வீட்டுக்கு வா உன்னைக் கவனிக்கிறேன் என்கிறார்.

வீட்டுக்குப்போனால் உதை கிடைக்கும் என்று பயந்து, நண்பன் உதவியுடன் அச்சகத்தில் தங்குகிறான். மறுநாள் வழக்கம் போல பள்ளி செல்கிறான். பள்ளிக்கு வரும் அம்மா அவனைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்துச்செல்கிறான்.

மறுநாள் வகுப்பில் சொந்த அனுவபத்தை வைத்து கட்டுரை எழுதச் சொல்கிறார் ஆசிரியர். அன்த்வான் தன்னைப் பாதித்த பால்சாக்கின் சில வரிகளையும் சேர்த்து எழுதுகிறான். இவ்வாறு தொடர்ந்து தவறு செய்வதால் ஆசிரியர் சஸ்பெண்ட் செய்கிறார். அவனுக்குப் பரிந்து பேசிய ரெனேவையும் வகுப்பை விட்டு வெளியேற்றுகிறார்.

இனிமேல் நான் வீட்டுக்குப்போனால் என்னை மிலிட்டரி ஸ்கூலில் சேர்த்திருவாங்க என்கிறான் அன்த்வான். ‘வா வந்து என் வீட்ல தங்கிக்க.. என்று கூறி அழைத்துச் செல்கிறான்.

ஒரு நாள் அன்த்வான் செலவுக்காக தன் அப்பாவின் அலுவலகத்திலிருக்கும் டைப்ரைட்டரைத் திருடி மாட்டிக்கொள்கிறான். அப்பா அன்த்வானை போலிஸ் ஸ்டேஷன் கூட்டிச் செல்கிறார். அவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்ப முடிவு செய்கின்றனர்.

மறுநாள் அவனது அம்மா வருகிறாள். போலிஸ் அதிகாரி விடுமுறை நாட்களில் அவனைத் தனியாக விட்டுட்டுப் போவீங்களா என்கிறார். அம்மா ஆமாம் என்கிறாள். அத்துடன் அன்த்வான் பிறந்த பிறகு தான் இவரைக் கல்யாணம் செய்துக்கிட்டேன். அவர் அவனோட அப்பா இல்லை என்கிற விசயத்தையும் சொல்கிறாள்.

சிறைச்சாலையில் நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அம்மா வருகிறாள். ‘இனி அப்பா உன் மேல எந்த அக்கறையும் எடுத்துக்க மாட்டாரு.. நீ இங்கேயே இரு’ என்கிறாள். அம்மாவின் அன்பற்ற பேச்சைக் கண்டு அன்த்வான் உறைந்து போகிறான்.

மறுநாள் அன்த்வான் தப்பிக்கிறான். காவலர்கள் அவனைத் துரத்துகின்றனர். அன்த்வான் தொடர்ந்து ஓடுகிறான். ஒரு கட்டத்தில் கடலை அடைகிறான். அதற்கு மேல் ஓட முடியாமல் நிலப்பரப்பை நோக்கித் திரும்புகிறான். திரும்பியவன் முகம் அதிர்ச்சியில் உறைவதோடு படம் முடிவடைகிறது.


படம் பார்த்து முடிகையில் அன்த்வானைப் போலவே நம் மனமும் அதிர்ச்சியில் உறைகிறது. செய்யாத தப்புக்கு தண்டணை அனுபவித்தல் என்பது அன்த்வானுக்கு தொடர்ந்து நடக்கிறது. அவனது அம்மா செய்த தவறால் தந்தை பெயர் தெரியாதவனாக உலகில் பிறந்தது தொடங்கி, வகுப்பறையில் ஆசிரியரிடம் தண்டனை எனத் தொடர்ந்து அது சிறைச்சாலையில் முடிகிறது.

பிரெஞ்ச் புதிய அலை சினிமாவில், மிக முக்கியமான இப்படம்.. 1959 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஃப்ரான்ஸ்வா த்ரூபோ. அவரின் இன்னல் மிகுந்த பால்யகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

No comments:

Post a Comment