Sunday, August 8, 2010

                            சோட்ஸி

                                                        யுகன்அன்பிற்கு ஏங்கும் மனம்

சோட்ஸி ஒரு இளம் கேங்க் லீடர் நான்கு பேர் கொண்டது அவனது குழு. ரயிலில் பயணியிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்கின்றனர். பயணி பணம் கொடுக்க மறுக்க குழுவில் ஒருவன் கத்தியால் குத்திவிடுகிறான். பயணி இறந்து விடுகிறார். பணத்தை எடுத்துக்கொண்டு இறங்கிவிடுகின்றனர். அச்சம்பவம் குறித்து குழுவில் டீச்சர் பாய் என்றழைக்கப்படுபவன் சோட்சியைக் கடுமையாகப் பேசுகிறான். கோபம் கொண்ட சோட்சி அவனைப் பலமாக அடிக்கிறான். பின் கோபத்துடன் வெளியேறுகிறான். மழையில் நனைந்தபடி சாலையில் போய்க்கொண்டிருக்கிறான்.
அப்போது ஒரு பெண்மணி காரை நிறுத்திவிட்டு கேட் கதவைத் திறக்கப் போன வேளையில் சட்டெனப்போய் காரை எடுக்கிறான். குறுக்கிட்ட அந்தப் பெண்மணியை சுட்டுவிட்டு காரில் விரைகிறான். காரில் போய்க் கொண்டிருக்கும் போது குழந்தை அழுகுரல் கேட்கிறது. அதன் பின்தான் காருடன் கைக் குழந்தையையும் கடத்திவிட்டோம் என்பதை உணர்கிறான். தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு காரை ரோட்டில் விட்டுவிட்டு கிளம்ப முயல்கிறான். குழந்தையின் வீறிட்ட அழுகுரல் சத்தம் அவனைத் தடுக்கிறது.

சிறுவயதில் நோயில் படுத்த படுக்கையாய் கிடக்கும் தாய்.. தந்தையின் அன்பற்ற செயல் இவற்றால் வீட்டை விட்டு வெளியேறி தெருவில் வளந்ததை நினைத்துப்பார்க்கிறான். அது போன்ற நிலை குழந்தைக்கு வரக் கூடாதென்று நினைத்து குழந்தையைத் தூக்கிச்செல்கிறான். ஆனால் அவனால் குழந்தையைச் சரியாக வளர்க்க முடியவில்லை. அதே தெருவில் கணவனை இழந்து கைக்குழந்தையுடன் வாழ்பவள் மரியம். அவள் வீடு தேடிச் சென்று துப்பாக்கி முனையில் பால் கொடுக்கச் செய்கிறான்.

இன்னொரு முறை போகும் போது குழந்தை இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறாள். குழந்தையை மரியம் கொஞ்சும் போது தனக்கு இது போன்ற தாய்ப்பாசம் கிடைக்கவில்லையே என ஏங்குகிறான். கிளம்பும் போது இது என் குழந்தை ஜாக்கிரதை என்கிறான்.

குழந்தை அவனுடன் இருக்கும் அந்த குறுகிய நாட்களில் அவனது வாழ்க்கைமுறையே மாறிவிடுகிறது.


தன் குழுவில் இருக்கும் டீச்சர் பாயை தொடர்ந்து படிக்கவைப்பதற்காக பணம் திருடலாம் என முடிவெடுக்கின்றனர். சோட்சி குழந்தையின் வீட்டுக்குக் கூட்டி வருகிறான். குழந்தையின் அப்பாவை கட்டிப்போட்டிவிட்டு ஆளுக்கொரு திசையில் போகின்றனர்.
ஒரு அறைக்குள் நுழைந்த சோட்சி அங்கே நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கண்டு அக்குழந்தை எவ்வளவு வசதியுடன் வாழ்ந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்கிறான். குழந்தையாக மாறி நெடுநேரம் அந்த அறையை ரசித்தபடி இருக்கிறான்.

பின் பணத்தைக் கொள்ளையடிக்காமல் குழந்தைக்குத் தேவையான பொருட்களை மட்டும் எடுத்துக் கொள்கிறான். அதைப்பார்க்கும் மற்றொருவன் நீ என்ன பைத்தியமா என்று திட்டுகிறான்.

கட்டிப்போடப்பட்டிருக்கும் குழந்தையின் அப்பா அலாரத்தை அழுத்துகிறார். கோபமடைந்த சோட்ஸியின் நண்பன் அவரைச் சுடப்போகிறான். அதற்குள் சோட்ஸி நண்பனைச் சுட்டு வீழ்த்துகிறான் குழந்தையின் தந்தை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க அங்கிருந்து தப்புகிறான்.

அன்று இரவு மரியம் வீட்டிற்கு வருகிறான். குழந்தை விசயம் எனக்குத் தெரியும் நியூஸ் பேப்பரில் பார்த்தேன் என்கிறாள். அக்குழந்தையைத் ஒப்படைத்துவிடு என்கிறாள். குழந்தையை ஒப்படைத்த பிறகும் நான் வீட்டுக்கு வரலாமா என்கிறான். மெளனமாக தலையசைக்கிறாள்.

குழந்தையை ஒப்படைக்கப் போகிறான். வாசலில் வைத்துவிடப்போக மனமில்லாமல் பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டு போகலாம் என்று காத்திருக்கும் அந்த சிறிய இடைவேளையில் அங்கே வந்த போலிசார் அவனைச் சுற்றி வளைக்கின்றனர். குழந்தையைக் கண்ணீர் மல்க ஒப்படைத்து விட்டு சரணடைகிறான்.

படத்தின் அதிரடியான பின்னணி இசை வியப்புக்குரியது.


தான் இழந்துவிட்ட இனிய குழந்தைப் பருவத்தை அந்தக் குழந்தையும் இழந்துவிடக் கூடாதென்ற சோட்சியின் அன்பிற்கு ஏங்கும் மனமே படத்தை உயர்வானதொரு இடத்திற்கு இட்டுச் செல்கிறது.

.2005இல் வெளிவந்த இந்த தென்னாப்பிரிக்கப் ப்டத்தின் இயக்குநர் கெவின் ஹீட். சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இப்படம் வென்றிருக்கிறது.

No comments:

Post a Comment