Sunday, August 8, 2010

பரான்


 


 
காதல் மழை

லத்தீப் 17 வயது இளைஞன். ஒரு கட்டிடவேலை நடைபெற்றுக்கொண்டிருக்கும் இடத்தில் அங்குள்ள பணியாளர்களுக்கு டீ சாப்பாடு என உணவு தயாரித்துக் கொடுப்பது அவன் வேலை. ஒரு நாள் நஜாப் என்னும் தொழிலாளி வேலை செய்யும் போது  கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து விடுகிறார். அவர் கால் முறிந்து விடுகிறது. அவரால் இனி வேலைக்கு வரமுடியாது என்பதால் அவருடைய மகன் வேலைக்கு வருகிறான். ஆனால் அவனால் கனமான சிமெண்ட் மூட்டையை தூக்க முடியாமல் கீழே போட்டு விடுகிறான். அதைப் பார்த்துவிடும், கட்டிடப் பணி  நிர்வாகி மெமார் திட்டுகிறார். பின் அவனுக்கு எளிதான உணவு தயாரிக்கும் வேலையைத் தந்துவிட்டு லத்தீப் கட்டிட வேலையைச் செய்யச் சொல்கிறார்.

இதனால் அந்தப் பையன் மீது லத்தீப் கடுங்கோபம் கொள்கிறான். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவனைத் திட்டுகிறான்.
ஒருநாள் லத்தீப் கீழே போய்க்கொண்டிருக்கும் அந்தப் பையன் மீது மாடியில் இருந்து குழைத்த சிமெண்டை  ஊற்றுகிறான். அவன் ஒரு அறைக்குள் போய் தலையைத் துடைத்துக் கொண்டிருக்கும்போது லத்தீப் எதேச்சையாகப் பார்க்க அவன் பையனல்ல பெண் என்று தெரிந்து வியப்படைகிறான்.

அன்றிலிருந்து அவனுடைய சுபாவமே மாறிவிடுகிறது. அந்தக் கட்டிட வேலையில் நிறைய ஆப்கானிஸ்தான்காரர்கள் முறையான பெர்மிட் இல்லாமல் குறைவான சம்பளத்திற்கு வேலை செய்து வருகிறார்கள். இதனால் அடிக்கடி அதிகாரிகள் இன்ஸ்பெக்‌ஷன் வருவார்கள். அந்த நேரத்தில் ஆப்கானிஸ்தான் தொழிலாளிகள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

அன்று இன்பெக்‌ஷன் வந்த போது அவள் அதிகாரிகளைப்பார்த்து ஒடுகிறாள். அதிகரிகள் துரத்துகின்றனர். லத்தீப் ஓடிப்போய் போலீஸ்காரர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். இதற்காக மெமாரிடம் திட்டும் வாங்குகிறான்.

அதன் பின் அப்பெண் (அவள் பெயர் பரான்) வேலைக்கு வராமல் நின்றுவிடுகிறாள். அவள் இல்லாதது லத்தீப்பிற்கு ஏதோ செய்கிறது. அவளைத் தேடிப்போய் பார்க்கிறான். அவள் கல் சுமக்கும் கடுமையான வேலையைச் செய்துகொண்டிருக்கிறாள்.
பணத்திற்காகத்தானே இவ்வளவு கஷ்டப்படுகிறாள் என   இதுவரைதான் சேர்த்து வைத்திருந்த பணத்தையெலாம் சுல்தான் என்பவரிடம்கொடுத்து பாரன் அப்பாவிடம் கொடுக்கச்சொல்கிறான். ஆனால் அவரோ அப்பணத்தை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தான் போய் விடுகிறார். இன்னொரு முறை தன் இருப்பிற்க்கே முக்கியமான அடையாள அட்டையைக் விற்று கிடைத்த பணத்தையெல்லாம் அவரிடம் போய்க் கொடுக்கிறான். அவர் நன்றி சொல்கிறார். பின்னர் அவர்கள் மறுநாள் ஆப்கானிஸ்தான் போகிறார்கள். இது திரும்பமாட்டார்கள் என்று தெரிந்துகொள்கிறான். பலத்த மனப்போராட்டத்திற்குப் பின் சாந்தமான மனநிலைக்கு திரும்புகிறான்.

மறுநாள் அவர்கள் ஊருக்குக் கிளம்பும்போது பொருட்களை வண்டியில் ஏற்ற உதவுகிறான். பரான் ஒரு பையை எடுத்துவரும் கீழே தவற விட்டு விடுகிறாள். பரான் அதைப் பொறுக்கி எடுக்கிறாள். லத்திப்பூம் உதவுகிறான். அப்போது அவளை நேருக்கு நேர் பார்க்கிறான். அவளும் பார்க்கிறாள். பையை எடுத்துக்கொண்டு அவள் கிளம்பும்போது முந்தைய நாள் பெய்தமழையில் அவள் ஷூ பதிந்து கொள்கிறது. அதை லத்தீப் எடுத்து விடுகிறான். வண்டி கிளம்புகிறது. லத்தீப் பரானைப் பார்த்தபடி இருக்கிறான். பரானும் இவனைப் பார்த்த படி போகிறாள். வண்டி போன பிறகு திரும்பும் லத்தீப் சேற்றில் அவள் காலடி தடம் புதைந்திருப்பதைப் பார்க்கிறான். அது ஒன்று தான் அவள் விட்டுச் சென்ற நினைவு. அதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது மழை பெய்யத் தொடங்கி அந்த காலடிச் சுவடை  நிறைப்பதுடன் படம் முடிகிறது.

  ஒன்று சொல்லிக் கொள்ளாமல் பரான் லத்தீப்பை  பிரிந்து போகும் போது நம் இதயம் வேதனையால் சூழ்ந்தது போலாகிவிடும். லத்தீப்பின் காதல் அத்தனை ஆழமானது. பரான் தன் நினைவான விட்டுச் சென்ற அந்தக் கால்சுவட்டையும் மழைநீர் நிரப்பி துயரமான கவிதை போன்று முடிகையில் நாம் ஆழ்ந்த பெருமூச்சுவிடுவதை தவிர்க்கமுடியாது.

2001 ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு விருதுகளை வென்ற  இந்த ஈரானியத்  திரைப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி.

யுகன்
No comments:

Post a Comment