Sunday, August 8, 2010



                              யுகன்

        

டோட்டாவின் பிலிம் துண்டுகள்

சல்வடோர்-டி-விட்டா, ரோமின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். அன்று இரவு தாமதமாக வீடு திரும்பியவர், தன் காதலியின் மூலம் அல்ஃபிரேதோ இறந்த விஷயத்தைக் கேள்விப்படுகிறார். பெரும் கவலையடைகிறார். அவர் நினைவுகள் இப்பொழுது பால்ய காலத்தை நோக்கிச் செல்கிறது.

 சல்வடோர்-டி- விட்டா வின் செல்லப் பெயர் டோட்டோ. அவனுக்கு சினிமா என்றால் வெகு பிரியம். பள்ளி செல்லும் நேரம் தவிர தியேட்டரில் தான் இருப்பான். இதற்காக அவன் அம்மாவிடம் அடிக்கடி அடிகூட வாங்குவான். தியேட்டர் ஆப்ரேட்டர், அல்பிரேதோவுக்கு டோட்டோ மீது அன்பு உண்டு. டோட்டோ அவரிடம் ஆப்ரேட்டர் வேலையை தனக்கு கற்றுத் தரும்படி கேட்கிறான். அது ஒரு அடிமை வேலை என்று சொல்லி கற்றுத் தர மறுக்கிறார்.
பின் அவரே கற்றுத் தரும்படி ஆகி விடுகிறது. ஒரு நாள் தியேட்டரில் தீ விபத்து ஏற்படுகிறது. டோட்டோ அவரைக் காப்பாற்றுகிறான். ஆனாலும் அவர் பார்வை பறி போய் விடுகிறது. தியேட்டரும் எரிந்து போய் விடுகிறது.
இப்போது தியேட்டர் புதுப்பிக்கப்படுகிறது. டோட்டோ தான் புது ஆப்ரேட்டர். டோட்டோ இளைஞன் ஆகிறான் அல்ஃபிரேதோ நட்பும் இன்னும் பலப்படத்தான் செய்கிறது. தந்தையற்ற டோட்டோவிற்கு தன்னை தந்தை ஸ்தானத்தில் நிறுத்திக் கொள்ளும் அல்ஃபிரேதோ அவன் எதிர்காலம் பற்றி கவலைப்படுகிறார். ஒரு நாள் டோட்டோ 8 எம்.எம் கேமராவில் சில விஷயங்களை படம்பிடித்து வர,  அவனுக்கு சினிமா தான் எதிர்காலம் என்று கண்டுபிடிக்கிறார்.
அவன் எதிர்காலம் பாதிக்கப்படுமென்று நினைத்து அவன் காதலை அவனுக்கே  தெரியாமல் பிரிக்கிறார். ஊரை விட்டு நகரத்திற்கும் போகச் சொல்கிறார். எந்த வேலை செய்தாலும் ஆப்ரேட்டர் கேபினை நேசித்து வேலை செய்தது போல் செய் என்கிறார்.

டோட்டோ என்ற சல்வடோர் டி விட்டா இப்பொழுது புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தன் கிராமத்துக்குத் திரும்புகிறார். அல்ஃபிரேதோவின் இறுதிச் சடங்கில் கலந்து  கொள்கிறார். பால்ய காலத்தில் தான் சந்தித்தவர்களை மீண்டும் சந்திக்கிறார். தன் காதலியையும் சந்திக்கிறார். அல்ஃபிரேதோ தன் காதலை பிரித்ததையும் அறிகிறார். காதலி அவர் சரியாகத்தான் செய்திருக்கிறார் என்கிறாள். உன் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் சொல்கிறாள்.
அல்ஃபிரேதோ வீட்டிற்குப் போகிறார். அவர் பரிசாக விட்டுச் சென்றதாக, ஒரு பிலிம் ரோலையும். ஸ்டூலையும் அவர் மனைவி தருகிறார். அவர் எப்பொழுதும் உன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார் என்றும் சொல்கிறாள்.
ரோம் திரும்பும் சல்வடோர், திரையரங்கில் அல்ஃபிரேதோ கொடுத்த பிலிம் சுருளை ஓட்டிப் பார்க்கிறார். அதில் தொடுக்கப்பட்ட பல முத்தக்காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வருகிறது அந்த பிலிம் துண்டுகள் அனைத்தும் தான் சிறு வயதில் அவரிடம் கேட்டு அடம் பிடித்தவை, அதை அவர் தனக்குப் பரிசாக விட்டுச் சென்றிருக்கிறார் என்று அறிந்து கண்கலங்குகிறார்.

 ஒரு சாதரண தியேட்டர் ஆப்பரேட்டராக வாழ்வை முடிக்க நேர்ந்திருக்கும் தன்னை இவ்வளவு பெரிய ஆளாக்கிய, அந்த அற்புதமான மனிதரின் நட்பையும், அன்பையும் நினைத்து நினைத்து வியக்கிறார்.

முத்தக்காட்சிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
சல்வடோர் சந்தோஷத்தில் கண்ணில் நீர் பெருக படம் பார்த்துக் கொண்டிருப்பதோடு படம் நிறைவடைகிறது.

இந்த உலகப் புகழ்பெற்ற இத்தாலிய சினிமாவின் இயக்குநர் கிசெப்பே டோர்னடோரே. இப்படம் ஆஸ்கார், கான் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

No comments:

Post a Comment