Sunday, August 8, 2010


உலக சினிமா


ஸ்பிரிங்.. சம்மர்.. ஃபால்.. விண்டர்.. அண்டு ஸ்பிரிங்

வாழ்வின் பருவங்கள்

யுகன்

வசந்த காலம், கோடைக்காலம், குளிர் காலம் என ஐந்து பருவங்களை பின்னணியாகக் கொண்டு ஒரு புத்த மதத் துறவி ஒருவரின் வாழ்க்கையைக் கூறும் படம் இது.

முதலில் வசந்த காலம். முதிய துறவிக்கு உதவியாளராக இருக்கிறான் ஆறு வயதுச் சிறுவன். சுற்றி மலைகள் சூழ்ந்து ஏரியின் நடுவின் இருக்கிறது இவர்களது மடம். முதிய துறவிக்கு வேண்டிய மூலிகைகளைப் பறித்து வர வேண்டியது சிறுவனின் வேலை. ஒரு நாள் நீந்திக்கொண்டிருக்கும் மீனைப் பிடித்து அதன் உடம்பில் கல்லைக் கட்டி மீண்டும் நீந்த விடுகிறான். மீன் தட்டுத் தடுமாறி நீந்துவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறான். இது போன்றே தவளைக்கும் பாம்புக்கும் செய்கிறான்.

இதை முதிய துறவி பார்த்துவிடுகிறார். மறுநாள் சிறுவன் தூங்கி எழும்போது அவன் முதுகில் கல் கட்டப்பட்டிருக்கிறது. சுமை பொறுக்க முடியவில்லை. இது போலத்தானே நீ கல் கட்டி விட்ட மீனுக்கும் இருக்கும். இப்படியே போய் நீ கட்டியதை அவிழ்த்துவிடு. எதாவது ஒன்று இறந்துவிட்டால் அதன் பாரத்தை நீ வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டியதாகிவிடும் என்கிறார். பாறாங்கல்லைச் சுமந்தபடி போகிறான். தவளை தவிர மீதி இரண்டும் இறந்திருக்கின்றன. சிறுவன் அழுகிறான்.

இப்போது கோடைக்காலம். சிறுவன் இளைஞனாகிறான். அப்போது அவர்கள் மடத்திற்கு வைத்தியத்திற்காக ஒரு இளம் பெண்ணை அவள் அம்மா விட்டுச் செல்கிறாள். சில நாட்களிலேயே இளைஞன் அவள் மீது நாட்டம் கொள்கிறான். அது உடலுறவில் முடிகிறது. ஒரு நாள்  முதிய துறவி இதைப் பார்த்து விடுகிறார். அந்தப் பெண்ணிடம் உனக்கு உடம்பு இப்ப எப்படி இருக்கு என்கிறார். அவள் குணமாகியிருச்சு என்கிறாள். சரியான வைத்தியம்தான் செய்திருக்கிறான் என்று சொல்லி அவளை அங்கிருந்து அனுப்புகிறார். இளைஞன அவள் பிரிவால் துடிக்கிறாள்.

முதிய துறவி அவனிடம், ஆசை ஒரு பொருளை சொந்தமாக்கிக்கொள்ளச் சொல்கிறது, சொந்தமாக்கிக்கொண்ட பின் துன்பமே மிஞ்சும் என்கிறார். குருவின் பேச்சைக் கேளாமல் அவன் அவளைத் தேடி நகரத்திற்குச் செல்கிறான்.

இப்போது இலையுதிர்காலம். முதிய துறவி தனியாக வசிக்கிறார் இளைஞன் மடத்திற்கு வருகிறான். சீடனை மனைவியைக் கொன்ற குற்றத்திற்காகக் கைது செய்ய போலீசார் மடத்திற்கு வருகின்றனர். சீடன் போலிசாரை நோக்கிக் கத்தியை நீட்ட துறவி என்ன செய்கிறாய் என்று அதட்டி மனதை அமைதிப்படுத்தும் புத்த மத சூத்திரங்களை எழுதச் சொல்கிறார். அவன் எழுதி முடித்ததும் போலிசார் அவனைக் கூட்டிச்செல்கிறனர். முதிய துறவி தான் வாழ்நாளின் இறுதியில் இருப்பதை உணர்ந்து படகில் அமர்ந்து தன்னைத் தானே எரித்துக்கொள்கிறார்.

இப்போது குளிர்காலம் சிறைக்குச் சென்ற இளைய துறவி நடுத்தர வயது ஆளாக வருகிறான். தன் மனதையும் உடலையும் வலுப்படுத்தப் பல பயிற்சிகளைச் செய்கிறான். ஒரு நாள் இரவு முகம் முழுவதும் மூடிய பெண்மணி மடத்தில் வந்து குழந்தையை விட்டுச் செல்கிறாள். துறவி அவள் முகமூடியை அகற்ற முயல்கிறார். வேண்டாமென்று அவள் காலில் விழுகிறாள். அன்று இரவு மடத்தை விட்டு போகும் வழியில் உறைந்து கிடக்கும் குளத்தில் தவறி விழுந்து இறக்கிறாள்.

மறுநாள் அவளின் பிரேதத்தை துறவி பார்க்கிறார். இதுவரை தான் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக பெரும் பாறாங்கல்லை உடம்பில் கட்டிக்கொண்டு புத்தர் சிலையைக் கையில் வைத்துக்கொண்டு உயரமான மலை மீது ஏறுகிறார். புத்தர் சிலையை அங்கே வைத்து தியானம் செய்கிறார்.

இப்போது மறுபடியும் வசந்த காலம். அந்தப் பெண் விட்டுவிட்டுப் போன பையன் சீடனாவும் இளைஞன் நடுத்தர வயது கடந்த துறவியாகவும் இருக்கின்றனர். சிறுவன் ஒரு ஆமையைத் திரும்பிப் போட்டு அது தடுமாறுவதைக் கண்டு மகிழ்கிறான் படம் முடிகிறது.

இரண்டு  மணி நேரம் தியானம் செய்த உணர்வைத் தருகிறது இந்தப் படம். மனம் சாந்தமாகிறது. மலைகள் சூழ்ந்து ஏரியின் நடுவே இருக்கும் குடில் நமக்குள் பலவித எண்ணங்களைக் கிளறிவிடுகிறது. முதிய துறவியின் எப்போதும், எதற்கும் கலங்காத அமைதி நம்மை ஆட்கொள்கிறது. படம் பார்க்கும் அனுபவம் ஓர் ஆன்மிக அனுபவமாக மாறுகிறது.

கிம் கி துக் இயக்கிய இந்தத் தென் கொரியா நாட்டுப் படம் 2003இல் வெளியானது. உலகம் முழுவதும் பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றது.

No comments:

Post a Comment