Sunday, August 8, 2010

பை சைக்கிள் தீஃப்.
யுகன்.

இரண்டாண்டுகளாக வேலை தேடிக் கொண்டிருக்கும் ரிச்சிக்கு அன்று போஸ்டர் ஒட்டும் வேலை கிடைக்கிறது. வேலைக்கு சைக்கிள் அவசியம். படுக்கை விரிப்புகளை விற்று அடமானம் வைத்த சைக்கிளை மீட்கின்றனர்.

முதல் நாள் வேலையைத் தொடங்குகிறார். சைக்கிளை சுவர் ஓரத்தில் சாய்த்து நிறுத்திவைத்திருக்கிறார். அப்போது அவ்வழியாக வரும் மூவர் சைக்கிளையும் ரிச்சியையும் பார்க்கின்றனர். பின் ஒருவன் சட்டென சைக்கிளை எடுத்துக் கொண்டு ஒடுகிறான். ரிச்சி திருடன்.. திருடன் என்றபடி அவனைத் துரத்துகிறான். திருடனின் கூட்டாளிகள் ரிச்சியைத் திசை திருப்ப திருடன் தப்புகிறான். சைக்கிளைத் தொலைத்துவிட்டு கலங்கி நிற்கிறார் ரிச்சி.

போலிஸ் ஸ்டேஷனில் போய் புகார்க் கொடுக்கிறார். சரி கண்டு பிடிக்கிறோம் என்று கூறுகின்றனர். பின் தன் நண்பன் பையாக்கோவிடம் விஷயத்தைச் சொல்கிறார். இது மாதிரியான திருட்டு சைக்கிள்களை எல்லாம் பாகம் பாகமாக கழட்டி பியாஸா விட்டோரியா மார்க்கெட்டில் தான் விற்பார்கள். அதிகாலையில் போனால் சைக்கிளைக் கண்டு பிடித்துவிடலாம் என்கிறார் நண்பன்.

மறுநாள் மார்க்கெட்டிற்குப் போகின்றனர். அந்த மார்க்கெட்டில் தேடிக் கிடைக்காததால்.. அது போன்றிருக்கும் இன்னொரு மார்க்கெட்டிற்குப் போகின்றனர். அவர்கள் போன நேரம் கடும் மழை பெய்கிறது. மழையால் கடைகளை மூடத் துவங்குகின்றனர். தேடல் தடைபட ரிச்சி நிலை குலைந்து போகிறார். மழைக்காக ஒதுங்கியிருக்கும் அந்த நேரத்தில் திருடனைப் பார்க்கிறார். ஆனால் அவன் தப்பி விடுகிறான்.
அதே நாளில் இன்னொரு சமயம் திருடன் அவரிடம் மாட்டுகிறான். திருடின சைக்கிளை ஒழுங்காக் கொடுத்திரு என்கிறார். எனக்கொன்றும் தெரியாது என்கிறான் திருடன். திருடனுக்கு ஆதரவாகப் பலர் கூடுகின்றனர். திருடன் கையில் கிடைத்தும் சைக்கிளை அவரால் மீட்க முடியவில்லை.

நாள் முழுவதும் அலைந்த களைப்பில் ரிச்சியும் புரூனோவும் பிளாட்பார சுவரில் அமர்கின்றனர். கட்டிடத்தின் வாசலில் தனியாக நிற்கும் சைக்கிளைப் பார்க்கிறார். நெடுநேரத்திற்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவர் புரூனோவை வந்து கொண்டிருக்கிற ட்ராம் வண்டியில் ஏறிப்போய் ஓரிடத்தில் காத்திருக்கச்சொல்கிறார். புரூனோ ஏறுவதற்குள் ட்ராம் வண்டி கிளம்பி விடுகிறது.

அப்போது திருடன்.. விடாதே பிடி.. என்ற சத்தம் கேட்கிறது. திரும்பிப் பார்க்கும் புரூனோ தன் தந்தை சைக்கிளை ஓட்டிச் செல்வதையும் அவரைப் பலர் துரத்துவதையும் பார்த்துத் திகைத்துப் போகிறான்.

ரிச்சி மாட்டிக்கொள்கிறார். கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு நன்றாக அடிக்கிறது. புரூனோ அப்பா.. அப்பா.. என்று அழுகிறான். கூட்டத்தில் ஒருத்தர் இவனை போலிசில் ஒப்படைக்கனும் என்கிறார். சைக்கிளின் உரிமையாளர் இவனை இப்படியே விட்டுடலாம்.. போகட்டும் என்கிறார்.

கூட்டம் கலைகிறது. தன் மகனின் முன்னால் இவ்வாறு நடந்து கொண்டதை நினைத்து ரிச்சி விசும்புகிறார். புரூனோவும் அழுகிறான். பின் அவரின் கையை ஆறுதலாகப் பற்றுகிறான். கால்பந்தாட்டம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து ரிச்சியும் புரூனோவும் போகின்றனர். அங்கே படம் முடிகிறது.


சைக்கிளைத் திருட்டுக் கொடுத்த ரிச்சி பலவீனமான ஒரு தருணத்தில் இன்னொரு சைக்கிளை திருடி மாட்டிக் கொள்வது நம்மை கலங்கவைக்கிறது. தவறு செய்த தந்தையின் கையை மகன் புரூனோ ஆறுதலாகப் பற்றும் போது ரிச்சியுடன் சேர்ந்து நம் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுக்கின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய இத்தாலி நாட்டின் துயரநிலையை இப்படம் முகத்தில் அறையும் யதார்த்தத்துடன் சொல்கிறது.

நியோ ரியலிசப் படங்களில் தலை சிறந்த படமாக இன்றளவும் கொண்டாடப்படும் இப்படம் 1948 இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் விட்டோரியோ டி சிகா.

No comments:

Post a Comment