Sunday, August 8, 2010

உலக சினிமா:

நோ மேன்ஸ் லேண்ட்

யுகன்


வெடிக்கக் காத்திருக்கும் கண்ணி வெடி

இருள் விலகட்டும் போஸ்னிய நாட்டு ராணுவ வீரர்கள் சிலர் ஓரிடத்தில் காத்திருக்கிறார்கள். விடிந்ததும்தான் தெரிகிறது தாங்கள் தவறான பாதையில் வந்து எதிரி நாட்டின் (செர்பியா) எல்லைக்கு அருகே வந்து விட்டோம் என்று. எதிரி நாட்டு வீரர்கள் சுடுகிறார்கள். பலர் சுடப்பட்டு விழுகிறார்கள். மீதப் போர் தப்பி ஓட பீரங்கித் தாக்குதல் நடத்துகின்றனர். சீராவும் சிக்கியும் தப்பித்து ஓடி ஒரு கால்வாயில் ஒளிகின்றனர். எதிரி நாட்டு வீரர்களான நினோவும் இன்னொருவனும் யாராவது இருக்கிறார்களா எனப் பார்க்க. கால்வாய் அருகே வருகின்றனர். சீரா படுகாயம் அடைந்து நகர முடியமல் படுத்துக் கிடக்கிறான். வீரர்களைப் பார்த்ததும் சிக்கி ஒளிந்து கொள்கிறான். வந்த வீரர்கள் அசைவின்றி மயங்கிக் கிடக்கும் சீராவைப் பார்க்கிறனர். பின் விளையாட்டைப் போல அவனைத் தூக்கி அவனுக்கு அடியில் கண்ணி வெடியை வைக்கின்றனர். இப்போது அவனை யாராவது தூக்கினால் கண்ணி வெடி வெடித்து 50 அடி தூரத்திற்கு எதுவுமே மிஞ்சாது என்று பேசிக்கொள்கின்றனர்.

ஒளிந்திருக்கும் சிக்கி துப்பாக்கியுடன் வெளிவந்து இருவரையும் சரமாரியாகச் சுடுகிறான். கண்ணிவெடி வைத்தவன் இறந்துவிடுகிறான். நினா காயத்துடன் விழுகிறான். இப்பொழுது அந்தக் கால்வயில் நினா, சிக்கி, கன்னிவெடிக்கு கீழே படுத்திருப்பவன் என மூன்று பேர்தான் இருக்கிறார்கள்.

சிக்கி, நினா இருவரும் ஒரு முடிவுக்கு வந்து பதுங்கு குழிக்கு மேலே வந்து வெள்ளை நிற பனியனை அசைத்துத் தங்களைக் காப்பாற்ற வரும்படி வேண்டுகோள் விடுகின்றனர்.

எல்லையின் இருபுறமும் இருக்கும் வீரர்கள் இதைப்பார்க்கிறார்கள் ஐ. நா. சபைக்குத் தகவல் தெரிவிக்கிறார்கள்.

ஐ.நா.வின் கவச வண்டி கால்வாயை நோக்கி வருகிறது சிக்கியும் நினோவும் மகிழ்கிறார்கள். ஐ.நா. வீரன் நீல் உதவி செய்ய நினைக்கையில் வயர்லெஸ்ஸில் மேலிடத்திலிருந்து ‘யாரோ இருவருக்காக ஐ.நா. படை வீரனை இழக்க முடியாது’ உடனே நீ திரும்ப வந்து விடு என்கிறார்கள்.

நீல் கிளம்பும் போது எதிரி நாட்டு வீரனான நினோவும் கிளம்ப சிக்கி அவனைக் காலில் சுடுகிறான்.

உதவி செய்ய வந்த நீலின் வாகனம் திரும்பிப் போவதை ஒரு தொலைக்காட்சிக் குழு பார்த்துவிடுகிறது. அவர்கள் அமைதிப்பேச்சு வார்த்தை நடப்பதால் அது பற்றி எல்லைப் பகுதியில் கருத்துக் கேட்க வந்தவர்கள். நீலிடம் வந்து நீங்கள் உங்கள் தலைமை அதிகாரியும் நீங்களும் வயர்லெஸ்சில் பேசியதைக் கேட்டோம் என்கிறார் ஒரு பெண் நிருபர். அந்த நிருபரை அதிகாரிகளுடன் பேசச் செய்கிறான் நீல். அவர்கள் நிரூபரை எங்கள் அலைவரிசையில் செய்தியை ஒட்டுக் கேட்டதே தவறு. முதலில் இங்கிருந்து போய்விடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். அதற்கு நிருபர் இந்தச் செய்தியை உடனடியாக தொலைகாட்சியில் ஒளிபரப்பப் போகிறோம் முடிந்ததைப் பாருங்கள் என்கிறார். நிலைமை தீவிரமடைந்ததால் தலைமை அதிகாரி நீலை அங்கேயே இருக்கச் சொல்கிறார்.

அடுத்த அரைமணி நேரத்தில் அங்கே பல தொலைக்காட்சியைச் சேர்ந்த நிருபர்கள் கூடிவிடுகின்றனர். ஐ.நா. தலைமை அதிகாரிகளும் அங்கே வருகின்றார்கள்.

இதற்கிடையில் நினோ சிக்கி தன்னைச் சுட்டதற்கு பழிவாங்கும் விதமாக அவனைக் கத்தியால் குத்துகிறான். ஐ. நா. வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்து பிரிக்கின்றனர். கண்ணிவெடியின் கீழ் படுத்திருக்கும் சீரா இதையெல்லாம் பார்த்து ஏதும் செய்ய முடியாத நிலையை நினைத்து கலங்கியபடி அசையாமல் படுத்திருக்கிறான்.

கண்ணி வெடியை அகற்றும் முயற்சி நடக்கிறது. சிக்கி நினோ இருவரையும் வெளியேற்றுகின்றனர். இதுதான் சமயம் என்று சிக்கி கைத்துப்பாக்கியால் நினோவைச் சுடுகிறான். வீரர்கள் சிக்கியைச் சுட்டுவிடுகின்றனர். இப்பொழுது இருவரும் இறந்துவிடுகிறார்கள். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் அந்த இடமே அமைதியாகிறது.

கண்ணி வெடியை எடுக்க முயற்சி செய்து பார்த்த நிபுணர் இனி மேல் அதைச் செயலிழக்கச் செய்ய முடியாது என்கிறார்.

சிறிது நேரத்திற்குப் பின் தலைமை அதிகாரியும் கேப்டனும் கூடிப் பேசி, கண்ணி வெடி அகற்றப்பட்டதாகவும் வீரன் சீரியஸாக இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்போவதாகவும் அறிவிக்கின்றனர்

இருட்டிய பிறகு அவ்விடத்தை விட்டுப் போவது கடினமென்பதால் அனைவரும் அவசர அவசரமாகக் கிளம்புகின்றனர். இப்போது அந்த இடத்தில் யாருமே இல்லை. சீரா மட்டும் தனியாகக் கண்ணி வெடியின் மேல் படுத்துக் கிடக்கிறான். மனதை உருக்கும் இசையுடன் படம் முடிவடைகிறது.

படம் முடியும் போது நிராதவின்றி கைவிட்டுச்செல்லப்பட்ட சீராவை நினைக்கையில் நம் இதயத்தை துயரம் சூழ்கிறது. போரின் அபத்தத்தை இரு நாட்டு வீரர்களை மையமாக வைத்து இயக்குநர் கூறுகிறார். கண்ணி வெடியை யார் வேண்டுமானாலும் இயக்கிவைத்து விடலாம். ஆனால் அவனே நினைத்தாலும் மீண்டும் அதை செயலிழக்கச் செய்ய முடியாது. போரைத் தொடங்குதல் எளிது ஆனால் அதன் விளைவுகள் மனித இனம் தாங்கிக்கொள்ள முடியாதது என்பதை இப்படம் வலுவாகச் சொல்கிறது.











இது போஸ்னிய நாட்டுத் திரைப்படம். 2001 ஆம் ஆண்டு வெளியானது. இதன் இயக்குநர் டேனிஸ் தனோவிக். சிறந்த திரைக்கதைக்காக கான் விருது, சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என பல்வேறு விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

No comments:

Post a Comment