Friday, September 3, 2010

தி வே ஹோம்
                 
 மெளனமாய் சில பாடங்கள்
     யுகன்

இக்கதை ஒரு கோடைவிடுமுறை காலத்தில் நிகழ்கிறது.
ஷாங்க்-வூ ஏழு வயது பையன். அவனது அம்மா கணவனைப் பிரிந்து வாழ்பவள். வைத்திருந்த கடையும் நஷ்டமாகி விட்டாதால் புதிய வேலை தேடும் பொருட்டு தன் மகனை மலையோரக் கிராமத்தில் வசிக்கும் தன் தாய் வீட்டில் விட்டு விட வருகிறாள்.
பாட்டிக்கு 75 வயது. அவளால் வாய்பேச முடியாது. காது மந்தம், கூன் விழுந்த முதுகு. நகரத்தில் பிறந்த வளார்ந்த ஷாங் வூவிற்கு கரண்ட் இல்லாத பைப்பில் தண்ணீர் வராத பாட்டியின் வீடு சுத்தமாகப்பிடிக்கவில்லை. அம்மா வலுக்கட்டாயமாக அங்கு இருக்கச் சொல்கிறாள் என்பதால் பாட்டியில் ஷூவின் மீது சிறுநீர் கழிக்கிறான்.
அம்மாவை பஸ் ஏற்றிவிட்டு வீடு திரும்பும் போது பாட்டி அவனை கைபிடித்து கூப்பிட அவளுக்கு கை கொடுக்க மறுக்கிறான். அவன் நெஞ்சில் கையை வைத்து வட்டம்போட்டு ஜாடை காட்டுகிறாள். அது என்னவென்று புரியாத ஷாங்வூ அவளை பைத்தியக்காரி என்று திட்டுகிறான்.
பாட்டி கொடுத்த உணவுகளைச் சாப்பிடாது தான் கொண்டு வந்த டின் உணவுகளையேச் சாப்பிடுகிறான்.. பாட்டியிடம் நட்புடன் இருக்கும் பக்கத்துவீட்டுப் பையன் நட்பு கொள்ள வரும்போது அவனிடம் பேச மறுக்கிறான். அவனுக்கு இருக்கும் ஓரே பொழுது போக்கு வீடியோ கேம் விளையாடுவது தான். எந்த நேரமும் விளையாடிக்கொண்டிருக்கிறான். பாட்டி அவனிடம் கேட்கும் ஓரே உதவி ஊசியில் நூல் கோர்த்துக் கொடுக்க வேண்டுமென்பதுதான். அதையும் வேண்டாவெறுப்பாக கோர்த்துக் கொடுப்பான்.

ஒரு நாள் வீடியோ கேமின் பேட்டரியும் தீர்ந்து விடுகிறது. பாட்டியிடம் பணம் கேட்கிறான். தன்னிடம் பணம் இல்லையென்கிறாள். துவைத்துக் கொண்டிருக்கும் பாட்டியை கோபத்தில் தள்ளிவிடுகிறான்.
பாட்டி பணம் தராததால் பாத்திரத்தை எட்டி உதைத்து உடைக்கிறான். பாட்டியின் ஷூவையும் ஒளித்து வைக்கிறான். அத்துடன் வீட்டின் சுவரின் பாட்டியை கேலி செய்து படங்களும் வரைந்து வைக்கிறான். பாட்டி இவையனைத்தையும் பார்த்துவிட்டு அவனை ஒன்றும் சொல்லாமல் அமைதியாகவே இருக்கிறாள்.

ஒரு நாள் பாட்டி அவனிடம் என்ன வேண்டுமென்று கேட்க கெண்டகி சிக்கன் வேண்டுமென்று கேட்கிறான். பாட்டி கோழி வாங்க நகருக்குப் போகிறாள். முதன் முறையாக பாட்டியை அன்புடன் கையசைத்து அனுப்பி வைக்கிறான்.
பாட்டி மழையில் நனைந்த படி வீடு திரும்புகிறாள். தூங்கி கொண்டிருந்தவனை எழுப்பி சாப்பிடு என்கிறாள். அவன் வேகவைத்த கோழி தேவையில்லை வறுத்த கோழிதான் வேண்டுமென்று அடம்பிடித்து அழுகிறான். இரவு எழுந்து பசி பொறுக்காமல் சாப்பிட்டு விடுகிறான்.

மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால் முந்தைய நாள் மழையில் நனைந்ததால் பாட்டிக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. முதன்முறையாக பாட்டி மீது பரிதாபபடுகிறான். பாட்டிக்கு போர்த்தி விடுகிறான். நெற்றியில் ஒத்தடமும் தருகிறான்.

மறுநாள் பாட்டியுடன் நகரத்திற்கு போகிறான். பாட்டி தன் தோட்டத்தின் விளைந்த பூசணிக்காய்களை விற்று அவனுக்கு ஷூ வாங்கி தருகிறாள். ஹோட்டலில் அவனுக்குப் பிடித்தமான உணவுகளை வாங்கித் தருகிறாள். பஸ் ஏறும் போது அவன் சாக்லேட் வேண்டுமென்று கேட்க அதையும் வாங்கித் தருகிறாள். இப்பொழுது ஒருவருக்கு ம்டடுமே பஸ் காசு இருக்கிறது, அவனை ஏற்றி விடுகிறாள்.

பாட்டி மாலை தான் வீடு திரும்புகிறாள். அதன் பிறகு தான் பாட்டி நடந்தே வந்திருக்கிறாளென்பதை அறிந்து மனம் நெகிழ்கிறான். அவளிடமிருந்து அன்புடன் மூட்டையை வாங்கிக் கொள்கிறான். முதன் முறையாக பாட்டி மீது அவனுக்கு அன்பு பிறக்கிறது.

தன் வீடருகே இருக்கும் பையனை மாடு விரட்டிவிடுகிறது என்று பொய் சொல்லி கீழே விழ வைக்கிறான். அவன் அடிக்க வர அவன் பாட்டி அடிக்கடி செய்வது போல நெஞ்சில் வட்டமிட்டு கான்பிக்கிறான். மறுநாள் ஷாங்வூவை மாடு உண்மையிலேயே விரட்டி வர அந்தப் பையன் தான் காப்பாற்றுகிறான். அப்போது நேற்று நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்கிறான். அது தான் நேற்றே மன்னிப்புக் கேட்டு விட்டாயே என்கிறான். அப்போது தான் நெஞ்சில் வட்டமிட்டு காட்டினால் மன்னிப்பு கேட்பது என்று அர்த்தம் என்று தெரிந்து கொள்கிறான்.

பாட்டியின் மீது அன்பு பிறந்த அத்தருணத்தில் அம்மா அழைத்துப் போக வருவதாக எழுதிய கடிதம் வருகிறது.

ஷாங் வூ தானாகவே நிறைய ஊசியில் நூல் கோர்த்து வைக்கிறான்

மறுநாள் ஊருக்கு கிளம்புகிறார்கள். அம்மா பாட்டியிடம் எதாவது சொல்லவேண்டுமா என்கிறாள். ஷாங் வூ அமைதியாக நிற்கிறான். பஸ் வருகிறது. அதில் ஏறுகிறார்கள். பஸ் சிறுது தூரம் போன பிறகு மனம் கேளாத ஷாங் வூ பஸ்ஸின் பின் புற கண்ணாடியில் வழியாக நடந்த அனைத்திற்கும் மன்னிப்புக் கேட்பது போல நெஞ்சில் வட்டமிட்டு காண்பிக்கிறான். அன்புடன் கையை அசைத்து டாட்டா காண்பித்து விடைபெற்றும் கொள்கிறான். உலகிலுள்ள் அத்தனை பாட்டிக்குகளுக்கும் இப்படம் சமர்ப்பணம் என்பதோடு படம் முடிகிறது.

படம் முடியும் போது நம் இதயம் கனத்திருக்கும். நம் மனமும் பால்ய காலத்திற்கு சென்று நம் பாட்டியின் அன்பைத் தேடும்.

தன் வாழ்வின் பெரும் பகுதியை வாழ்ந்து முடிந்து விட்ட அந்த வாய் பேச முடியாத பாட்டி தன் ஏழு வயது பேரனுக்கு எதுவும் பேசாமலே வாழ்வின் நெறிகளான எதையும் எதிர்பார்க்காத அன்பு, பொறுமை கருணை, இயற்கையை நேசிக்கும் குணம், என அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறாள்.

வாய் பேச முடியாத அந்த மூதாட்டி ஷாங் வூ கிற்கு மட்டுமல்ல படம்  பார்க்கும் நம் அனைவருக்கும் மெளனத்தின் மூலம் பாடம் கற்றுத் தருகிறாள்.

பல்வேறு விருதுகளையும் உலகம் முழுவதும் நன்மதிப்பையும் பெற்ற  இந்த தென்கொரிய நாட்டுத் திரைப்படம் 2002-இல் வெளியானது. இப்படத்தின் இயக்குநர் ஒரு பெண். அவர் பெயர் லீ ஷியான் ஹியான்.

No comments:

Post a Comment