Sunday, August 8, 2010


                 கலர் ஆஃப் பாரடைஸ்
                        
                           யுகன்








கடவுளைத் தேடும் கை

சிறுவன் முகம்மது கண்பார்வையற்றவன். பார்வையற்றோர் பள்ளியில் படித்து வருகிறான். ஆண்டுத்தேர்வு முடிந்து விடுமுறை வருகிறது. அவனுடன் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அவரவர் பிள்ளைகளை வந்து அழைத்துசெல்கின்றனர். முகம்மதுவின் தந்தை மட்டும் வெகு தாமதமாய் வருகிறார். வந்தவர் முகம்மதுவை திரும்ப அழைத்துச் செல்ல முடியாது அவனை பள்ளியிலே வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார். பள்ளியின் முதல்வர் இது தொண்டு நிறுவனம் அல்ல என்று கூறி திட்டி அனுப்புகிறார்.

வேறு வழியில்லாமல் முகம்மதுவை ஊருக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்.

அவருக்கு முகம்மது மற்றும் இரண்டு மகள்கள். வயதான அம்மா. மனைவி ஐந்து வருடங்களுக்கு முன்னால் இறந்துவிட்டாள். இப்பொழுது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் இருக்கிறார். அதற்கு பார்வையற்ற முகம்மது தடையாக இருப்பானென்று நினைக்கிறார். பெண்பார்க்கப் போனபோது கூட தனது இரண்டு மகள்கள், என் அம்மா, நான் உங்கள் பெண்ணை நன்றாகப் பார்த்துக் கொள்வோம் என்று தான் சொல்கிறார். முகம்மதுவை எப்படியாவது வீட்டை விட்டு எங்கேயாவது அனுப்பிவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

முகம்மதுவை வைத்து பாட்டிக்கும், அவருக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. பாட்டியும் தங்கைகளும் முகம்மதுவின் மீது மிகவும் பிரியம் கொண்டிருக்கிறார்கள்.

முகம்மதுவின் தங்கைகளுக்கு இன்னும் பள்ளி விடுமுறை தொடங்கவில்லை. அடம்பிடித்து அவர்களுடன் பள்ளி செல்கிறான். பார்வை திறனுடைய மாணவர்களைவிட நன்றாகப் படிக்கும் முகம்மதுவைக் கண்டு ஆசிரியர் வியக்கிறார். அவன் விருப்பப் பட்டால் தினமும் பள்ளிக்கு வரலாம் என்கிறார்.

பள்ளிக்கூட வாயிலில் நின்றிருக்கும் முகம்மதுவை அவனது தந்தை பார்த்து விடுகிறார். கடும் கோபத்துடன் வீட்டுக்கு வந்து அவனை ஏன் பள்ளிக்கு அனுப்பினாய் என பாட்டியுடன் சண்டை போடுகிறார். இவனை இங்கிருந்து அழைத்துப் போய் பார்வையற்ற தச்சன் ஒருவரது பட்டறையில் சேர்த்துவிடப்போவதாகவும் சொல்கிறார்.


ஒருநாள் முகம்மதுவை யாருக்கும் தெரியாமல் அழைத்துக் கொண்டுபோய் தச்சனிடம் உதவியாளராக சேர்த்து விட்டுவிடுகிறார்.

இதனால் பாட்டி மனமுடைந்து நோய்வாய்ப்படுகிறார். முகம்மதுவின் எதிர்காலத்திற்ககத்தான் இவ்வாறு செய்தேன் என தந்தை கூற பாட்டி உன் எதிர்காலத்திற்காகத்தான் இவ்வாறு செய்தாய் என்கிறார் பாட்டியின் உடல்நிலை மோசமாகிறது. முகம்மதுவை அழைத்து வரவா என்கிறார். பாட்டி பதில் சொல்லாமல் மௌனமாகவே இருக்கிறாள். ஒரு நாள் இறந்து விடுகிறாள். கேதத்திற்கு வந்த பெண்வீட்டார் விஷயம் அறிந்து கொள்கின்றனர். திருமணம் நின்று போகிறது.

மறுநாள் முகம்மதுவை அழைத்துவரப்போகிறார் தந்தை. வரும் வழியில் கடும் மழை. குதிரையில் அமர வைத்து பாலத்தின் வழியே அழைத்து வரும் போது பாலம் உடைந்து குதிரையுடன் முகம்மதுவும் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் விழுகிறான். முதலில் பேசாமல் நிற்கும் தந்தை பின் ஆற்றில் குதிக்கிறார். சீறிப்பாய்ந்தோடும் தண்ணீர் அவரை எங்கேயே அடித்துச்செல்கிறது.

மறுநாள் காலை கடல் ஓரத்தில் ஒதுங்கிக் கிடக்கிறார். பறவைகளின் சத்தம் கேட்டு முழித்தவர் தள்ளாடியடி ஓரிடத்தை நோக்கிப் போகிறவர். அங்கு முகம்மது ஒதுங்கிக் கிடக்கிறான். பையனைத் தூக்கி வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுகிறார். இப்பொழுது முகம்மதுவின் கை மட்டும் அண்மையில் காட்டப்பட்டு அதில் சூரிய ஒளிக்கதிர்கள் நிறைகின்றன. அவன் கை விரல்கள் லேசாக அசைவதோடு படம் முடிவடைகிறது.

படம் முடிகையில் பார்வையற்ற முகம்மதுவை நினைத்து நம் கண்கள் நிறையும். ஒரு சமயத்தில் கூட்டிலிருந்து தவறி விழுந்த சிட்டுக்குருவிகள் இரண்டை தட்டுத்தடுமாறி மரமேறி கூட்டில் சேர்க்கும் முகம்மது கூடில்லாப் பறவையாக தவிக்கிறானே என நம் மனம் கலங்கும்.

இப்படத்தில் பாத்திரப்படைப்பு அற்புதமானது. தந்தையை ஒரேயடியாக கெட்டவனாக்காமல் ஒரு சமயம் நல்லவராய் ஒரு சமயம் கெட்டவரவாய் , ஒரு சமயம் அன்புகொண்டவராய் மறு சமயம் வெறுப்புற்றவராய் என ஒரு ஊசலாட்டம் கொண்ட யதார்த்த மனிதராகவே படைக்கப் பட்டிருக்கிறார்.

இறுதிக் காட்சியில் தந்தை முகம்மதுவை மடியில் வைத்துக் கொண்டு அழும்போது முகம்மது இறந்துவிட்டானோ என பதைபதைக்கும் மனம் அவன் கை விரல்கள் லேசாக ஆடிய பிறகு தான் ஆசுவாசம் அடையும்.

படத்தின் உரையாடல் ஒவ்வொன்றும் நம் மனதை நெகிழச்செய்யும்.

பார்வையற்றவர்களை கடவுளுக்கு மிகவும் பிடிக்கும் என்று ஆசிரியர் சொல்லும் போது.. மிகவும் பிடிக்குமென்றால் ஏன் பார்வையறவர்களாக படைக்க வேண்டும் என்று கேள்வியெழுப்புகிறான் முகம்மது. கைகளால் கடவுளை தொட்டு உணர முடியும் என்று ஆசிரியர் சமாதானம் செய்யும் போது நான் கைகள் கொண்டு கடவுளைக் கண்டறிவேன். அப்பொழுது என் துயரங்களையும், இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியங்களைக் கூட அவரிடம் சொல்வேன் என் முகம்மது அழுதபடி சொல்லும் போது நம் இதயம் உடைந்து விடும். முகம்மதுவை நினைத்து நம் உள்ளம் உருகும்.

பல விருதுகளையும் பெரும் பாராட்டையும் இந்த ஈரானியத் திரைப்படம் 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் இயக்குநர் மஜித் மஜிதி.


2 comments:

  1. hai sir ella vimarsanamum super sir nan film institute student sir unga website enakku romba use a irukku thankku sir neenga ithu pola innum niraiya ulaga cinemakkala engalukku arimugap paduthunga sir
    and then pls see my short film midhi vandi pls sir pathittu comment pannunga sir you tube link http://www.youtube.com/watch?v=W_pH0qWGhHw

    ReplyDelete
  2. my emai add kamal.kamal916@gmail.com sir

    ReplyDelete